30-இல் பிரதமராக மோடி பதவியேற்பு: குடியரசுத் தலைவர் மாளிகையில் விரிவான ஏற்பாடுகள் 

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, நாட்டின் பிரதமராக, இரண்டாவது முறையாக, நரேந்திர மோடி, வரும் 30-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.
30-இல் பிரதமராக மோடி பதவியேற்பு: குடியரசுத் தலைவர் மாளிகையில் விரிவான ஏற்பாடுகள் 

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, நாட்டின் பிரதமராக, இரண்டாவது முறையாக, நரேந்திர மோடி, வரும் 30-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். இந்த விழாவுக்காக, குடியரசுத் தலைவர் மாளிகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
முன்னாள் பிரதமர்கள் ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோருக்குப் பிறகு, தனிப்பெரும்பான்மையுடன் 5 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்து தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்கும் தலைவர்களின் வரிசையில் நரேந்திர மோடி இடம்பெற்றுள்ளார். 
இந்நிலையில், பதவியேற்பு விழா குறித்து குடியரசுத் தலைவர் மாளிகையின் ஊடகப் பிரிவுச் செயலர் அசோக் மாலிக் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரதமருக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் 30-ஆம் தேதி இரவு 7 மணிக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014-இல் மோடி பதவியேற்றபோது, அவரது அழைப்பை ஏற்று சார்க் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் விழாவில் கலந்து கொண்டனர். அதேபோல், இந்த முறையும் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு பல சர்வதேச நாடுகளின் தலைவர்களுக்கு மோடி அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
542 மக்களவைத் தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 353 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில், பாஜக மட்டும் 303 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக கூட்டணி எம்.பி.க்களின் கூட்டம், தில்லியில் நாடாளுமன்றத்தில் உள்ள மைய மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், பாஜக கூட்டணியின் தலைவராகவும், பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழுவின் தலைவராகவும் நரேந்திர மோடி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையிலான கூட்டணிக் கட்சித் தலைவர்கள், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அவரது மாளிகைக்குச் சென்று சந்தித்து, பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழுத் தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை அளித்தனர். இந்தச் சந்திப்பின்போது, பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி, சிரோமணி அகாலி தளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், லோக் ஜன சக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான், சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே, பாஜக மூத்த தலைவர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், நிதின் கட்கரி, மேகாலய முதல்வர் கான்ராட் சங்மா, நாகாலாந்து முதல்வர் நெய்பியூ ரியோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையடுத்து, ராம்நாத் கோவிந்தை சந்தித்த நரேந்திர மோடி ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரினார். அதை ஏற்றுக்கொண்ட ராம்நாத் கோவிந்த், அரசமைப்புச் சட்டப்படி, பிரதமர் பதவிக்கான அதிகாரத்தை மோடிக்கு அளித்தார். மேலும், மத்திய அமைச்சரவையில் இடம்பெறப்போகும் உறுப்பினர்களின் பட்டியல், பதவியேற்புக்கான நாள் ஆகியவற்றை அளிக்குமாறு மோடியை ராம்நாத் கோவிந்த் கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, மோடி அளித்த விவரங்களின் அடிப்படையில், பதவியேற்பு விழா, வரும் மே 30-இல் நடைபெறும் என்ற தகவலுடன் செய்திக்குறிப்பை குடியரசுத் தலைவர் மாளிகை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com