காங்கிரஸ் தோல்விக்கு மூத்த தலைவர்கள் காரணம்: ராகுல், பிரியங்கா குற்றச்சாட்டு

மக்களவைத் தேர்தல் தோல்விக்கு மூத்த தலைவர்களை ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் கடுமையாகக் குற்றம்சாட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் தோல்விக்கு மூத்த தலைவர்கள் காரணம்: ராகுல், பிரியங்கா குற்றச்சாட்டு

மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்துவதற்காக நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்களை ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் கடுமையாகக் குற்றம்சாட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கியமாக, மூத்த தலைவர் ப.சிதம்பரம், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் ஆகியோர் தங்கள் மகன்களுக்கு தொகுதி பெறுவதிலும், அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதில்தான்அதிக கவனமாக இருந்தனர். கட்சியைப் பற்றி கவலைப்படவில்லை என்று ராகுல் காந்தி நேரடியாக குற்றம்சாட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் மேலும் கூறியதாவது:

செயற்குழுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எவ்விதத் தயக்கமுமின்றி கட்சியின் மூத்த தலைவர்கள் மீதான தனது அதிருப்தியை வெளிப்படையாகத் தெரிவித்தார். முக்கியமாக தனது மகனுக்கு தொகுதி ஒதுக்காவிட்டால் கட்சியில் இருந்து விலகிவிடுவேன் என்று ப.சிதம்பரம் மிரட்டியது, தனது மகனுக்கு சீட் தராவிட்டால் மத்தியப் பிரதேச முதல்வராக நான் எப்படி இருக்க முடியும் என்று கமல் நாத் கூறியது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், தனது மகனுக்காக ஒரு வார காலம் ஜோத்பூர் தொகுதியில் பிரசாரம் செய்துவிட்டு, மற்ற தொகுதிகளைப் புறக்கணித்தது ஆகியவற்றை ராகுல் காந்தி கடுமையான வார்த்தைகளால் சுட்டிக் காட்டினார்.

கட்சிப் பதவியில் இருந்து விலகுவதாகக் கூறிய ராகுல் காந்தி,  தனது குடும்பத்தைச் சேர்ந்த வேறு யாரும் கட்சித் தலைமையை ஏற்கப் போவதில்லை என்றும் அறிவித்தார். அப்போது, கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தலைவர்களும் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று ராகுலைக் கேட்டுக் கொண்டனர்.

மேலும், கூட்டத்தில் இருந்து ஒருமுறை பாதியிலேயே வெளியேறிய ராகுல், மீண்டும் கட்சியின் தலைவராக இருந்து கூட்டத்தை நடத்தப் போவதில்லை என்றும் கோபத்துடன் கூறினார். 

கடுமையான கோபத்துடன் காணப்பட்ட பிரியங்கா காந்தியும் இக்கூட்டத்தில் பேசினார். அப்போது, பிரதமர் மோடியை எதிர்த்து ராகுல் தொடர்ந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டபோதும், மூத்த தலைவர்கள் யாரும் ராகுலுக்கு பக்கபலமாக இல்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.

முக்கியமாக, ரஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு, காவலாளியே திருடன் ஆகிய பிரசாரங்களை ராகுல் முன்னெடுத்தபோது, மூத்த தலைவர்கள் யாரும் ராகுலுக்கு ஆதரவாக பிரசார களத்தில் இல்லை என்றார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடையக் காரணமாக உள்ள அனைவரும் இந்த அறையில்தான் இருக்கிறார்கள் என்றும் பிரியங்கா கூறினார்.

அதே நேரத்தில் ராகுலின் ராஜிநாமா முடிவுக்கு பிரியங்காவும் எதிர்ப்புத் தெரிவித்தார். அப்போது, "ராகுல் ராஜிநாமா செய்வது பாஜகவின் வலையில் நாமே சென்று விழுவதாக அமையும்' என்று பிரியங்கா கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com