பாதுகாப்பு வளையத்தில் கேரள கடல் பகுதி: ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஊடுருவல்?

இலங்கையில் இருந்து 15 ஐஎஸ் பயங்கரவாதிகள் கேரள கடற்கரை வழியாக இந்தியாவின் லட்சத்தீவுக்குள் ஊடுருவியுள்ளதாக இந்திய உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையையடுத்து, இந்திய கடலோரப் பகுதிகளில் கடற்படை,
பாதுகாப்பு வளையத்தில் கேரள கடல் பகுதி: ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஊடுருவல்?

இலங்கையில் இருந்து 15 ஐஎஸ் பயங்கரவாதிகள் கேரள கடற்கரை வழியாக இந்தியாவின் லட்சத்தீவுக்குள் ஊடுருவியுள்ளதாக இந்திய உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையையடுத்து, இந்திய கடலோரப் பகுதிகளில் கடற்படை, கடலோர காவல்படை, கடற்படை போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

கடற்படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பிடிஐ செய்தியாளர்களிடம் கூறியதாவது: உளவுத்துறை எச்சரிக்கையையடுத்து, கடற்படை, கடலோர காவல்படையினர் கேரள மற்றும் லட்சத்தீவுகளின் கடற்கரைப்பகுதியில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 
கப்பல்கள், ஹெலிகாப்டர் போன்றவற்றையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதேபோல, கடலோர காவல்படையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்தனர். 
கேரள போலீஸாரும், கடலோர காவல் நிலையங்களை சேர்ந்த காவல்துறையினரும், உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். 
இதுகுறித்து தகலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: கடலோரப் பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர், குறிப்பாக, பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவல் கிடைத்துள்ளதையடுத்து போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர் என்றன. 
கடலோர காவல்துறையினர் கூறுகையில், கடந்த மே 23ஆம் தேதி இலங்கையின் உளவுப்பிரிவினர் அளித்த தகவலின்படி, கடலோர பகுதிகள் உஷார்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலுக்குப் பிறகு இங்கு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக, மீன்பிடி படகுகளின் உரிமையாளர்களுக்கும், மீனவர்களுக்கும் தகவல் அளித்து, கடலில் மீனவர்களை தவிர சந்தேகிக்கும் வகையில் நபர்கள் தென்பட்டால் தகவல் அளிக்குமாறு தெரிவித்துள்ளோம் என்று தெரிவித்தனர். 
இலங்கையில், கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி 8 இடங்களில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்ட மக்கள் பலியான சம்பவத்துக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று கொண்டது. 
இந்த சம்பவத்துக்குப் பிறகு, கேரளத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சார்பில் ஏற்கெனவே விசாரணை நடத்தி சென்றுள்ளனர்.  ஐஎஸ் பயங்கரவாதிகள் கேரளத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று என்ஐஏ எச்சரிக்கை விடுத்துள்ளதால் கண்காணிப்பு 
தீவிரமாகியுள்ளது.
கேரளத்தில் வசித்து வரும் சிலர் ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், அண்மையில் இராக் மற்றும் சிரியாவில் நடைபெற்ற தாக்குதலின்போது இது தெரிய வந்ததாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. 
இலங்கை கடற்படை எச்சரிக்கை: இதுகுறித்து, இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் இசுரு சூர்யபண்டாரா கூறியதாவது: இலங்கையில் இருந்து 15 ஐஎஸ் பயங்கரவாதிகள் இந்தியாவின் லட்சத்தீவுகளுக்கு தப்பிச் சென்றதாக உள்ளூர் மற்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதையடுத்து, இலங்கையிலும், கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 
குறிப்பிட்ட அந்த பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு செல்வதற்கான வாய்ப்புகளே அதிகமுள்ளது என்று தெரிவித்தார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com