பிரதமருக்குத் தொடர்ந்து குவியும் உலகத் தலைவர்களின் வாழ்த்துகள்

பிரதமருக்குத் தொடர்ந்து குவியும் உலகத் தலைவர்களின் வாழ்த்துகள்

மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, உலக நாடுகளின் தலைவர்களின் வாழ்த்துகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளன.

மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, உலக நாடுகளின் தலைவர்களின் வாழ்த்துகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளன.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்கெனவே பல உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், பிரிட்டன் பிரதமர் தெரசா மே, சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், கத்தார் அரசர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி உள்ளிட்ட தலைவர்கள் பிரதமரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தனர்.
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவும் பிரதமருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
தம்மை வாழ்த்திய சவூதி பட்டத்து இளவரசர் சல்மானுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா - சவூதி அரேபியா இடையிலான உறவை மேலும் மேம்படுத்த ஆர்வமுடன் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
கத்தார் அரசர் ஷேக் தமீமும், இந்தியாவுக்கும் தங்களது நாட்டுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.
பிரதமர் மோடிக்கு ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் வாழ்த்து தெரிவிக்கும்போது, இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இரு நாடுகளுக்கும் பொதுவான நலன் சார்ந்த விவகாரங்களில் கவனம் செலுத்தவும் வலியுறுத்தினார்.
ஜப்பானில் நடைபெறவிருக்கும் ஜி20 மாநாட்டின்போது நேரில் சந்தித்துப் பேச இரு தலைவர்களும் விருப்பம் தெரிவித்தனர்.
இந்திய மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்தின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்வதாக தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்ட பிரிட்டன் பிரதமர் தெரசா மே, மிகப் பெரிய வெற்றி பெற்றமைக்காக பிரதமர் மோடிக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com