பெங்களூருவில் பலத்த மழை: வேரோடு சாய்ந்த மரங்கள்

பெங்களூருவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள், போக்குவரத்து சிக்னல் கம்பங்கள் சாய்ந்தன. 
பெங்களூருவில் பலத்த மழை: வேரோடு சாய்ந்த மரங்கள்

பெங்களூரில் காற்று, இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததையடுத்து, சாலையில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்ததால் வாகனப் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. 


பெங்களூரில் சனிக்கிழமை 8.45 மணி முதல் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்தது.  காற்று, இடியுடன் கூடிய பலத்த மழையால் பல்வேறு இடங்களில் 10-க்கும் அதிகமான மரங்கள் விழுந்தன. ஒருசில இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்தன.  சாலைகளில் வெள்ளம் போல மழை நீர் தேங்கியதால் வாகனப் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.

 சாலையில் மழை நீர் தேங்கியதால்,  பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாக நேர்ந்தது.  சதாசிவ நகர்,  மல்லேஸ்வரம்,  ராஜாஜி நகர், ஹம்பி நகர், ஹொசஹள்ளி, விஜயநகர்,  மகாலட்சுமி லேஅவுட்,  கே.ஆர்.மார்கெட்,  காந்திநகர்,  கோரமங்களா உள்ளிட்ட பகுதிகளில் காற்று, இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.  இதனால் ஹம்பிநகர், ஹொசஹள்ளி, விஜயநகர், கிளப் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் சாலையில் விழுந்தன. ஒரு சில இடங்களில் நிறுத்து வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம், ஆட்டோ, கார் மீது மரங்கள் சாய்ந்தன.  மரங்கள் சாய்ந்ததால் சாலையில் வாகனப் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டது.


ஒரு சில பகுதிகளில் மின் கம்பங்களும் சரிந்து விழுந்தன.  எனினும்,  எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை.  பெங்களூரின் பெரும்பாலான சாலைகளில் ஓர் அடிக்கும் மேல் மழைநீர் தேங்கியிருந்ததால் கார், இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்ல மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.  அதனால் சாலையின் ஓரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு, மழைநீர் வடிந்ததும் வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.  நடைபாதையிலும் மழைநீர் தேங்கியதால்,  பொதுமக்களால் நடந்து செல்லவும் முடியாமல் தவித்தனர்.  சாலையில் விழுந்து கிடந்த மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. 


மாநகராட்சி ஊழியர்கள் கொட்டும் மழையிலும் மரங்களை துண்டுதுண்டுகளாக வெட்டி அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.  ஞாயிற்றுக்கிழமையும் சாலைகளில் சாய்ந்த மரங்கள்,  மின் கம்பங்கள் அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


ஒருசில பகுதிகளில் தாழ்வான இடங்களில் இருந்த வீடுகள்,  அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது.  மழைநீரை வீட்டில் இருந்து வெளியேற்றவும் பலர் முயற்சி மேற்கொண்டனர்.  பலத்த காற்று வீசியதால்,  ஒருசில இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.  இதைத் தொடர்ந்து,  பெங்களூரின் ஒருசில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.  இரவு சூழ்ந்த வேளையில் பலத்த மழையையொட்டி மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பரவலாக பொதுமக்கள் பாதிப்புக்குள்ளானார்கள்.  

அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. பல இடங்களில் வெயில் சதமடித்தது. 

இந்நிலையில், பெங்களூருவில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. 

இந்த மழையால் நகரின் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலையோரம் இருந்த பெரிய, பெரிய மரங்கள் காற்றின் வேகத்தால் தாக்குப்பிடிக்க முடியாமல் சாலையில் விழுந்தன. மேலும், மின் கம்பங்களும் சாய்ந்தன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com