வாராணசி மக்களின் கட்டளைக்காக காத்திருக்கிறேன்: பிரதமர் மோடி நன்றியுரை

இத்தனைக்கு பிறகும் பாஜக ஹிந்தி பேசும் மாநிலங்களின் கட்சி என்று தான் நீங்கள் நினைக்கிறீர்களா? என்று மோடி கேள்வி எழுப்பினார். 
வாராணசி மக்களின் கட்டளைக்காக காத்திருக்கிறேன்: பிரதமர் மோடி நன்றியுரை

உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி தொகுதியில் தம்மை தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி 27ஆம் தேதி (திங்கள்கிழமை) வாராணசி சென்றார். 

அதற்கு முன்னதாக காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வழிபாடு நடத்தினார். 
வாராணசியில் முக்கிய பகுதிகள், குடியிருப்புகள் முதல் குறுகலான  வீதிகள் வரை ஊர்வலமாக சென்று வாராணசி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். 

பின்னர், பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது: 

வாராணசியில் உள்ள பாஜக தொண்டர்களாகிய நீங்கள் எனக்கு ஒரு கட்டளையிட்டீர்கள். அதாவது தேர்தல் அறிவித்தவுடன் 1 மாதத்துக்கு இங்கே வரவேண்டாம் எனவும், வெற்றி உறுதி எனவும் வாக்குறுதி அளித்தீர்கள். இதுபோன்ற ஒரு சுலபமான தேர்தலை நான் சந்தித்து கிடையாது. நான் நிம்மதியாக கேதார்நாத் கோயிலில் தியானத்தில் ஈடுபட்டிருந்தாலும், உங்களின் கடின உழைப்பு தான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம். 

இந்த தேசம் என்னை பிரதமராக தேர்ந்தெடுத்து இருந்தாலும், நான் என்றைக்குமே வாராணசி தொகுதி மக்களின் கட்டளைக்காக காத்திருக்கிறேன். உங்களுக்கு தான் முன்னுரிமை அளிப்பேன். ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில் தான் பாஜக பலம் பொருந்திய கட்சி என்று அனைவரும் விமர்சிக்கின்றனர். ஆனால், கர்நாடகத்தில் பாஜக அதிக இடங்களைப் பெற்றுள்ளதை யாரும் கவனிக்கவில்லை. 

பல ஆண்டுகளாக கோவாவில் பாஜக அரசு தான் நடைபெற்று வருகிறது. அஸ்ஸாம், லடாக் போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி தான் உள்ளது. நாடு முழுவதும் வெற்றிபெற்று ஆட்சியமைத்து வருகிறோம். இத்தனைக்கு பிறகும் பாஜக ஹிந்தி பேசும் மாநிலங்களின் கட்சி என்று தான் நீங்கள் நினைக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார். 

முன்னதாக, மக்களவைத் தேர்தலில், வாராணசி தொகுதியில் 4.79 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நரேந்திர மோடி வெற்றி பெற்று தொடர்ந்து 2-ஆவது முறையாக பிரதமராகி சாதனைப் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com