சுடச்சுட

  

  கர்நாடகத்தில் 3 அமைச்சர்கள் விரைவில் நியமனம்: சித்தராமையா

  By DIN  |   Published on : 28th May 2019 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sidharamaya


  கர்நாடக அமைச்சரவையில் காலியாக உள்ள 3 அமைச்சர் பதவிகளை விரைவில் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
  மைசூரில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
   காங்கிரஸில் அதிருப்தி அடைந்துள்ள எம்எல்ஏக்களை சமரசம் செய்யும் முயற்சியில் முதல்வர் குமாரசாமியும், துணைமுதல்வர் ஜி.பரமேஸ்வரும் ஈடுபட்டுவருகின்றனர். 
  அமைச்சரவையை திருத்தியமைக்கும் அல்லது விரிவாக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை. ஆனால், அமைச்சரவையில் காலியாக உள்ள 3 அமைச்சர் பதவிகளை நிரப்ப திட்டமிட்டுள்ளோம். 
  அமைச்சராக இருந்த சி.எஸ்.சிவள்ளியின் மறைவு, கூட்டணியில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சி விலகியதால் ராஜிநாமா செய்த என்.மகேஷ் ஆகியோரால் காலியான 2 அமைச்சர் பதவிகள்,  ஏற்கெனவே நிரப்பப்படாமல் இருந்த ஒருஅமைச்சர் பதவி ஆக 3 அமைச்சர் பதவிகளை நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. மஜத இரண்டு இடங்களையும், காங்கிரஸ் ஒரு இடத்தையும் நிரப்பும். 
  காங்கிரஸில் இருந்து ரமேஷ் ஜார்கிஹோளி விலக மாட்டார்: முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி, எந்தக் காலத்திலும், எந்த காரணத்துக்காகவும் காங்கிரசில் இருந்து விலக மாட்டார். 
  முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்திக்க காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, கே.சுதாகர் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது அங்கு எதேச்சையாக பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, ஆர்.அசோக், எம்பி சுமலதாவை சந்தித்துள்ளனர். இது தற்செயலானது. இதற்கு அரசியல் முக்கியத்துவம் எதுவும் இல்லை.
  கூட்டணி அரசு கவிழாது: கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழும் என்று எடியூரப்பா தொடர்ந்து கூறிவருகிறார். ஒருவேளை ஆட்சி கவிழாவிட்டால், அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகுவாரா எடியூரப்பா?  அவர் கூறுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை. கூட்டணி அரசு கவிழாது, பாஜக ஆட்சி மலராது.
  மக்களவைத் தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். மக்கள் தீர்ப்பை அலட்சியப்படுத்த முடியாது. அதற்காக பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய அவசியமில்லை. மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வென்றதற்காக பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி பதவியை ராஜிநாமா செய்தாரா? தேர்தலில் மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்கினாலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான சந்தேகம் விலகவில்லை என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai