சுடச்சுட

    

    சாரதா நிதி நிறுவன மோசடி: சிபிஐ முன்பு ராஜீவ் குமார் ஆஜராகவில்லை

    By DIN  |   Published on : 28th May 2019 01:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    RajeevKumar


    சாரதா  நிதி நிறுவன மோசடி தொடர்பான வழக்கில் அனுப்பப்பட்ட அழைப்பாணையை (சம்மன்) ஏற்று சிபிஐ அதிகாரிகள் முன்பு கொல்கத்தா நகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் திங்கள்கிழமை நேரில் ஆஜராகவில்லை. மேலும், சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜராவதற்கு கூடுதல் அவகாசம் கோரி அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
    மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக விசாரணை நடத்த ராஜீவ் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. பின்னர், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. 
    இதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட சிபிஐ, வழக்கின் முக்கிய ஆவணங்கள் சிலவற்றை ராஜீவ் குமார் அழித்துவிட்டதாகவும், சில முக்கிய ஆவணங்களை சிபிஐயிடம் இருந்து மறைத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியது. 
    இதுதொடர்பாக  ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் சென்றபோது, அவர்களை அந்த மாநில காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அத்துடன், சிபிஐயின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 3 நாள்கள் தர்னாவில் ஈடுபட்டார். இதையடுத்து, விசாரணைக்கு ராஜீவ் குமார் ஒத்துழைக்க மறுப்பதாக கூறி, 
    உச்சநீதிமன்றத்தில் சிபிஐ முறையிட்டது. 
    இந்த விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு ஆஜராக ராஜீவ் குமாருக்கு உத்தரவிட்டது. அத்துடன், ராஜீவ் குமாரை சிபிஐ கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்து கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி உத்தரவிட்டது.
    இதனிடையே, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக்கோரி சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தொடர்பான விசாரணையின்போது, ராஜீவ் குமாருக்கு எதிரான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
    இந்நிலையில், ராஜீவ் குமாரை கைது செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, உச்சநீதிமன்றம் கடந்த 17-ஆம் தேதி திரும்பப் பெற்றது.
    எனவே, ராஜீவ் குமாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ விரும்புகிறது. மேலும், சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு,  கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் திங்கள்கிழமை நேரில் ஆஜராகும்படி ராஜீவ் குமாருக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தது.
    இதனிடையே, ராஜீவ் குமாரை சிஐடி கூடுதல் டைரக்டர் ஜெனரலாக மேற்கு வங்க அரசு ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென நியமித்தது. இருப்பினும், கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ராஜீவ் குமார் திங்கள்கிழமை நேரில் ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நேரில் ஆஜராகவில்லை. இதற்குப் பதிலாக, கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தை கொல்கத்தா சிஐடி போலீஸார், சிபிஐ அலுவலகத்தில் அளித்தனர். அதில் தாம் 3 நாள்கள்  விடுமுறையில் இருப்பதால், சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜராக முடியாத நிலையில் இருப்பதாகவும், ஆதலால் கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என ராஜீவ் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai