சுடச்சுட

  
  prem-sing

  சிக்கிம் முதல்வராக சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சித் தலைவர் பிரேம் சிங் தமாங் என்ற பி.எஸ். கோலே (51) திங்கள்கிழமை பதவியேற்றார்.
  கேங்டாக்கில் உள்ள பல்ஜோர் மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், பிரேம் சிங் தமாங்குக்கு ஆளுநர் கங்கா பிரசாத் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். முதல்வர் தமாங், நேபாள மொழியில் பதவியேற்றார். 
  அவருடன் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்களும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் பெண் எம்எல்ஏ ஒருவர் கூட இல்லை. பெண்களுக்கு அமைச்சரவையில் தமாங் இடமளிக்கவில்லை. பதவியேற்பு விழாவில் முன்னாள் முதல்வர் பவன்குமார் சாம்லிங், சிக்கிம் ஜனநாயக முன்னணி மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
  சிக்கிம் கிராந்திகாரி மோர்சாச கட்சி கடந்த 2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. சிக்கிமில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 17இல் வெற்றி பெற்று சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. கடந்த 24 ஆண்டுகளாக சிக்கிமில் ஆட்சியிலிருந்த பவன்குமார் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி அரசு 15 தொகுதிகளில் மட்டுமே வென்று ஆட்சியை பறிகொடுத்தது. 
  சிக்கிம் சட்டப்பேரவைத் தேர்தலில் தமாங் போட்டியிடவில்லை. தேர்தலில் போட்டியிட்ட தமது கட்சி வேட்பாளர்களுக்காக அவர் பிரசாரம் செய்தார். இந்நிலையில், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி எம்எல்ஏக்கள் குழுத் தலைவராக அவர் சனிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க அவர் உரிமை கோரினார். இதையேற்று அவரை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தார்.
  தற்போது முதல்வராக தமாங் பதவியேற்றதைத் தொடர்ந்து, 6 மாதங்களில் சிக்கிம் சட்டப்பேரவை உறுப்பினராக வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. சிக்கிம் சட்டப்படி, முதல்வர் உள்பட 12 அமைச்சர்கள் மட்டுமே இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai