சுடச்சுட

  

  விடுதலைப்புலிகள் மீதான தடையை மறுஆய்வு செய்ய தீர்ப்பாயம்

  By DIN  |   Published on : 28th May 2019 01:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை (எல்டிடிஇ)பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளதற்கு வலுவான காரணங்கள் உள்ளனவா?  என்பதை ஆய்வு செய்ய தீர்ப்பாயம் ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சங்கீதா திங்ரா செகல் இந்தத் தீர்ப்பாயத்தின் தலைவராக இருப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
  இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை,  அண்மையில் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை, அரசிதழில் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 14-ஆம் தேதி வெளியிட்டது. இந்நிலையில், அதனை மறுஆய்வு செய்யும் வகையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.
  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ஆம் ஆண்டு தற்கொலைப் படைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என மத்திய அரசு அறிவித்தது. மேலும், அந்த இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு இந்தியா முழுவதும் தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை தடை நீட்டிக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பாக தமிழகத்தின் சென்னை, நீலகிரி, தில்லி உள்பட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த தீர்ப்பாயம், விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை சரியே என தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.  கடந்த 2014, மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை, 2019,  மே 13 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு (2024, மே மாதம் வரை) நீட்டித்து, அரசிதழில் அறிவிக்கையாக மத்திய அரசு கடந்த 14-ஆம் தேதி வெளியிட்டது.
  இந்நிலையில், சரியான காரணங்களின் அடிப்படையில்தான் விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடை தொடர்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய தீர்ப்பாயம் ஒன்றை மத்திய அரசு திங்கள்கிழமை அமைத்தது. சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ், அமைக்கப்பட்ட இந்தத்  தீர்ப்பாயம், விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை குறித்து மறுஆய்வு செய்யும்.
  2009-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில் தோல்வியடைந்ததை அடுத்து அந்நாட்டில் அந்த இயக்கத்தின் ஆதிக்கம் முற்றிலுமாக முடிவுக்கு வந்தது. 
  முன்னதாக, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தோல்விக்கு இந்திய அரசுதான் பொறுப்பு என்று கூறி, இணையதள கட்டுரைகள் மூலம் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் இந்தியாவுக்கு எதிரான உணர்வை பரப்பும் செயலில் புலம்பெயர்ந்தவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற பிரசாரம்,  இந்தியாவில் உள்ள மிக மிக முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்புக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். இதனால், அந்த இயக்கத்துக்கான தடையை நீட்டிப்பது அவசியமாகிறது என்று உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கையில் கூறப்பட்டிருந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai