அருணாசலில் ஆட்சியமைக்கபெமா காண்டுவுக்கு ஆளுநர் அழைப்பு

அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியமைக்க பாஜக மூத்த தலைவர் பெமா காண்டுவுக்கு ஆளுநர் பி.டி. மிஸ்ரா அழைப்பு விடுத்துள்ளார்.
அருணாசலில் ஆட்சியமைக்கபெமா காண்டுவுக்கு ஆளுநர் அழைப்பு


அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியமைக்க பாஜக மூத்த தலைவர் பெமா காண்டுவுக்கு ஆளுநர் பி.டி. மிஸ்ரா அழைப்பு விடுத்துள்ளார்.
அருணாசலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 41 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், சட்டப்பேரவைக்கான அக்கட்சி எம்எல்ஏக்கள் குழு தலைவராக பெமா காண்டு தேர்வு செய்யப்பட்டார்.
இதன்பின்னர் ஆளுநர் பி.டி. மிஸ்ராவை பாஜக மூத்த தலைவர் ஜே.பி. நட்டாவுடன் சென்று திங்கள்கிழமை காலை சந்தித்து ஆட்சியமைக்க பெமா காண்டு உரிமை கோரினார்.
இதைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு வெளியே பெமா காண்டு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  அருணாசலப் பிரதேச மாநில அரசியல் வரலாற்றில் முதல்முறையாக பாஜக தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கிறது.
 மாநிலத்தில் பாஜகவின் தாமரை மலர உதவியதற்கு மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
புதிய அரசு மீது அதிக எதிர்பார்ப்புகளுடன் மக்கள் உள்ளனர். எனது அரசுக்கு உண்மையான சவால் இப்போதுதான் தொடங்கியுள்ளது என்றார்.
முன்னதாக ஜே.பி. நட்டா செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டப்பேரவை எம்எல்ஏக்கள் குழுத் தலைவரை தேர்வு செய்யும் நிகழ்வுக்கு மேலிடப் பார்வையாளராக கட்சியால் நான்  நியமிக்கப்பட்டேன். கூட்டத்தில் சட்டப்பேரவை எம்எல்ஏக்கள் குழுத் தலைவராக பெமா காண்டுவை எம்எல்ஏக்கள் 41 பேரும் ஒருமனதாக தேர்வு செய்தனர் என்றார்.
இதைத் தொடர்ந்து, அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியமைக்கும்படி பெமா காண்டுவுக்கு ஆளுநர் பி.டி. மிஸ்ரா அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பை ஏற்று, இடாநகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் வரும் 29ஆம் தேதி நடைபெறும் விழாவில் புதிய அரசு பதவியேற்கவுள்ளது. இதில் அருணாசலப் பிரதேச முதல்வராக பெமா காண்டு பதவியேற்கிறார். அவரது அமைச்சரவை சகாக்களும் பதவியேற்கவுள்ளனர்.
முன்னதாக, அருணாசலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் முதல்முறையாக போட்டியிட்டது. அக்கட்சி 7 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேசிய மக்கள் கட்சி எனும் புதிய கட்சியும் 5 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் கட்சி 4 தொகுதிகளில் மட்டுமே வென்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com