உ.பி. அமைச்சரவை விரைவில் மாற்றம்: ஆதித்யநாத் ஆட்சியில் முதல் முறை

உத்தரப் பிரதேச அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ளது. அந்த மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு மேற்கொள்ளப்பட இருக்கும்
உ.பி. அமைச்சரவை விரைவில் மாற்றம்: ஆதித்யநாத் ஆட்சியில் முதல் முறை


உத்தரப் பிரதேச அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ளது. அந்த மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு மேற்கொள்ளப்பட இருக்கும் முதல் அமைச்சரவை மாற்றம் இதுவாகும். 
நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் அந்த மாநில கால்நடை வளர்ப்புத் துறை அமைச்சர் எஸ்.பி. சிங் பகேல் (ஆக்ரா), மகளிர் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ரீதா பஹுகுனா ஜோஷி (அலாகாபாத்), காதி கிராம உத்யோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் சத்யதேவ் பசெளரி (கான்பூர்) போட்டியிட்டு வென்றனர். 
மாநில பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுத் துறை அமைச்சரும், சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவருமான ஓம் பிரகாஷ் ராஜ்பர் சமீபத்தில் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் உத்தரப் பிரதேச அமைச்சரவையில் தற்போது 4 இடங்கள் காலியாகியுள்ளன. 
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு சமீபத்தில் பேட்டி அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத், நேரம்வரும்போது, அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று கூறியிருந்தார். 
இதுதொடர்பாக பாஜக வட்டாரங்கள் கூறியதாவது: 
மக்களவைத் தேர்தலில் அஸ்ஸாம் மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மஹேந்திர சிங், மத்தியப் பிரதேச பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஸ்வதந்த்ரதேவ் சிங் ஆகியோர் கட்சியின் வெற்றிக்காக அரும்பாடுபட்டனர். 
அதன் பலனாக அமைச்சரவை மாற்றத்தின்போது அவர்களுக்கு இடமளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஊரக வளர்ச்சி மற்றும் கிராம மேம்பாட்டுத் துறை இணையமைச்சராக மஹேந்திர சிங்கும், போக்குவரத்துத் துறை இணையமைச்சராக ஸ்வதந்த்ரதேவ் சிங்கும் நியமிக்கப்படலாம். 
மஹேந்திர சிங் பொறுப்பாளராக இருந்த அஸ்ஸாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளில் 9-ஐ பாஜக கைப்பற்றியது. 
அதேபோல், ஸ்வதந்த்ரதேவ் சிங் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில், பாஜக 28-ஐ கைப்பற்றியது. அந்த மாநில பேரவைத் தேர்தலில் காங்கிரஸிடம் பாஜக தோற்றிருந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது சவாலான பணியாகும் என்று அந்த வட்டாரங்கள் கூறின.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com