கர்தார்பூர் வழித்தடம்: இந்தியா, பாகிஸ்தான் அதிகாரிகள் ஆலோசனை

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கர்தார்பூர் வழித்தட திட்டத்தின் செயலாக்கம் குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினர்.
கர்தார்பூர் வழித்தடம்: இந்தியா, பாகிஸ்தான் அதிகாரிகள் ஆலோசனை


இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கர்தார்பூர் வழித்தட திட்டத்தின் செயலாக்கம் குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினர்.
சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக் தேவ், தனது வாழ்நாளில் ஏறத்தாழ 18 ஆண்டுகளைத் தற்போதைய பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் கழித்தார். அவரது நினைவாக, அங்கு தர்பார் சாஹிப் குருத்வாரா அமைக்கப்பட்டது. சர்வதேச எல்லைப் பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் ராவி நதிக்கரையில் அமைந்துள்ள அந்த குருத்வாராவுக்கு இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் நுழைவுஇசைவு (விசா) இன்றி புனிதப்பயணம் மேற்கொள்ள வசதியாக வழித்தடம் ஏற்படுத்தப்படவுள்ளது.
பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் மாவட்டத்தின் தேரா பாபா நானக் பகுதியிலுள்ள குருத்வாராவையும், கர்தார்பூர் தர்பார் சாஹிப் குருத்வாராவையும் இணைக்கும் வகையில் இந்த வழித்தடம் அமைக்கப்படவுள்ளது. இத்திட்டத்துக்கான அடிக்கல்லை, இந்தியப் பகுதியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும், பாகிஸ்தான் பகுதியில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கானும் கடந்த ஆண்டு நாட்டினர்.
குருதாஸ்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை இந்தியாவும், மறுபுறம் கர்தார்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை பாகிஸ்தானும் அமைக்க உள்ளன.
இந்நிலையில், இத்திட்டத்தின் செயலாக்கம் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள், திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினர். கர்தார்பூர் ஜீரோ பாய்ண்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை, மத்திய உள்துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகள் பங்கேற்றனர். சுமார் இரண்டு மணிநேரம் இக்கூட்டம் நடைபெற்றது. இதில், வழித்தட கட்டுமானம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
முன்னதாக, இதே இடத்தில் இரு நாட்டு அதிகாரிகள் பங்கேற்றக் கூட்டம் கடந்த ஏப்ரலில் நடைபெற்றது. அப்போது, இரு தரப்பிலும் தொழில்நுட்ப நிபுணர்களும், வெளியுறவுத் துறை அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
குரு நானக் தேவின் 550-ஆவது பிறந்த தினம் கொண்டாடப்படவிருக்கும் நவம்பர் மாதத்தில் இந்த வழித்தடத்தை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com