தில்லி மின் தேவை 2 மாதங்களில் 22 சதவீதம் அதிகரிப்பு!

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிகழாண்டு ஏப்ரல் , மே ஆகிய மாதங்களில் தலைநகர் தில்லியில் மின் தேவை 22 சதவீதம் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. 
தில்லி மின் தேவை 2 மாதங்களில் 22 சதவீதம் அதிகரிப்பு!

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிகழாண்டு ஏப்ரல் , மே ஆகிய மாதங்களில் தலைநகர் தில்லியில் மின் தேவை 22 சதவீதம் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. 

கடந்த ஆண்டு ஏப்ரலில் உச்சபட்ச மின் தேவை 5,200 மெகாவாட்டாக இருந்தது. நிகழாண்டு ஏப்ரலில் மின் தேவை 5,200 மெகாவாட்டை ஐந்து முறை கடந்துவிட்டது. ஏப்ரல் 30-ஆம் தேதி அதிகபட்ச மின்தேவை 5,664 மெகாவாட்டாக அதிகரித்திருந்ததாக தில்லி மின்துறை மற்றும் மின் விநியோக நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதுகுறித்து மின் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அவ்வப்போது இனிதான வானிலை இருந்த போதிலும், தில்லியின் மின் தேவை நிகழாண்டில் கடந்த ஆண்டைவிட 22 சதவீதம் அதிகரித்தது. கடந்த ஆண்டைவிட இந்த ஏப்ரலில் மின்தேவை 19 தருணங்களில் அதிகரித்து காணப்பட்டது.

2018, ஏப்ரல் 22-இல் 3,828 மெகாவாட்டாக இருந்தது.  நிகழாண்டில் இந்த அளவு 4,588 மெகாவாட் என 20 சதவீதம் அதிகரித்திருந்தது. கடந்த 2018, ஏப்ரல் 25-இல் மின் தேவை 4,438 ஆக இருந்தது. நிகழாண்டில் இந்த அளவு இதே தேதியில் 5,552 மெகாவாட்டாக உயர்ந்து. இது 19 சதவீதம் உயர்வாகும். நிகழாண்டு மே மாதமும் இதே நிலை தொடர்ந்தது. மே மாதத்தன்று முதல் 24 நாள்களில் மின் தேவை கடந்த ஆண்டு மே மாதத்தைவிட அதிகரித்து காணப்பட்டது. அதாவது மே 10-ஆம் தேதி 5,985 மெகாவாட்டை தொட்டது. இது 22 சதவீதம் உயர்வாகும். கடந்த ஆண்டு மே 10-இல் தில்லியின் மின்தேவை 4,899 மெகாவட்டாக இருந்தது.  எனினும், மின் தேவை நிகழாண்டு மே 15, 24 ஆகிய தேதிகளுக்கு இடையே மின் தேவை குறைந்து காணப்பட்டது.

இதமான வானிலை காரணமாக இந்நிலை இருந்தது. 2018, மே 10-இல் உச்சபட்ச மின்தேவை 6,442 மெகாவாட்டாக பதிவாகி இருந்தது.  தில்லியின் உச்சபட்ச மின்தேவை கோடைக்காலத்தில் 7,400 மெகாவாட் வரை செல்லக்கூடும். கடந்த ஆண்டு கோடைக் காலத்தில் மின்தேவை முதல் முறையாக 7,016 மெகாவாட்டை எட்டியது. 2002-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது மின்தேவை 250 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது உச்சபட்ச மின்தேவை 7,400 மெகாவாட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தில்லியின் மின் தேவையானது பல்வேறு முன்னணி நகரங்கள் மற்றும் மாநிலங்களைவிட அதிகமாக உள்ளது.

அதாவது, மும்பை, சென்னை ஆகிய இரு நகரங்களின் கூட்டு மின்தேவையைவிட தில்லியின் மின் தேவை அதிகமாகும். கொல்கத்தாவைவிட மூன்று மடங்கும், ஏழு வடகிழக்கு மாநிலங்களின் ஒட்டுமொத்த மின்தேவையைவிட 2.5 மடங்கும் அதிகமாக உள்ளது என்றார் அந்த அதிகாரி. இதற்கிடையே, தில்லியில் உள்ள 42 லட்சத்துக்கும் மேற்பட்ட நுகர்வோர்களின் மின் தேவையை சமாளிக்கும் வகையில், தேவையான மின்சாரத்தைப் பெறுவதற்கான ஏற்பாடுகளை பிஎஸ்இஎஸ் நிறுவனம் செய்துள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்த ஏற்பாட்டில் நீண்டகால மின்சாரம் கொள்முதல் ஒப்பந்தங்களும், இமாசலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், மேகாலயா, மணிப்பூர், சிக்கிம் உள்ளிட்ட இதர மாநிலங்களுடான ஒப்பந்தங்களும் இடம் பெற்றுள்ளன.

பிஎஸ்இஎஸ் மின்விநியோக நிறுவனங்கள் வங்கி ஏற்பாடுகள் மூலம் 865 மெகாவாட் வரை மின்சாரம் பெறும்.  இது தவிர, பிஆர்பிஎல் நிறுவனம் நிகழாண்டு ஏப்ரலில் இருந்து காற்றாலை மின்சாரம் 100 மெகாவாட் பெற உள்ளது. இவற்றில் 50 மெகாவாட் மின்சாரம் ஏற்கெனவே பெறப்பட்டு வருகிறது. பரிமாற்றம் அடிப்படையில் குறுகிய கால மின்சாரத்தையும் மின்விநியோக நிறுவனங்கள் பெற உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com