தேர்தல் தோல்வியால் விரக்தி: 2 நாள்களாக உணவைத் தவிர்த்த லாலு!

மக்களவைத் தேர்தலில் படுதோல்வியடைந்ததால், விரக்தியடைந்த ராஷ்ட்ரீய ஜனதா தளம்(ஆர்ஜேடி)  தலைவர் லாலு பிரசாத்  இரண்டு நாள்களாக மதிய உணவைத் தவிர்த்துள்ளார்.
தேர்தல் தோல்வியால் விரக்தி: 2 நாள்களாக உணவைத் தவிர்த்த லாலு!


மக்களவைத் தேர்தலில் படுதோல்வியடைந்ததால், விரக்தியடைந்த ராஷ்ட்ரீய ஜனதா தளம்(ஆர்ஜேடி)  தலைவர் லாலு பிரசாத்  இரண்டு நாள்களாக மதிய உணவைத் தவிர்த்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த வியாழக்கிழமை வெளியானது. இதில் பிகார் மற்றும் ஜார்க்கண்டில் ஆர்ஜேடி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இந்த படுதோல்வியால் விரக்தியடைந்த அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் வியாழக்கிழமையில் இருந்து தொடர்ந்து இரண்டு நாளாக மதிய உணவை தவிர்த்துள்ளார். 
இதுதொடர்பாக அவரது மருத்துவர் கூறுகையில்,  தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து லாலு மிகவும் வருத்தத்தில் இருக்கிறார். இரண்டு நாள்களாக மதிய உணவை தவிர்த்து விட்டார். அதையடுத்து அவரது உடல்நிலை மோசமாவதை கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமை அவரை உணவு உண்ணச் செய்தோம் என்றார்.
பிகார் முதல்வராக இருந்தபோது, மாட்டுத் தீவன ஊழலில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் லாலு சிறையில் உள்ளார். அங்கு அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, தற்போது  மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1997-ஆம் ஆண்டு ஆர்ஜேடி தொடங்கப்பட்டதில் இருந்து, இதுவரை இப்படி ஒரு தோல்வியை அக்கட்சி சந்தித்தது இல்லை. கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, பிரதமர் நரேந்திர மோடி அலை வீசியதாக கூறப்பட்ட போதிலும், பிகாரில் 4 மக்களவைத் தொகுதிகளில் ஆர்ஜேடி வெற்றி பெற்றது.

அதையடுத்து பிகாரில் 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்ஜேடி, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் இணைந்து மகா கூட்டணி அமைத்தது. அந்த தேர்தலில் 80 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆர்ஜேடி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இந்நிலையில், மகா கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் விலகினார்.

லாலு பிரசாத் இல்லாமல், முதல்முறையாக ஆர்ஜேடி தேர்தல் களம் கண்டது. இதில் அவரது மகள் மிசா பாரதி உள்பட அக்கட்சி வேட்பாளர்கள் பலரும் பாஜக வேட்பாளர்களிடம் படுதோல்வியடைந்தனர்.

இந்நிலையில், தேர்தலில் தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், லாலு பிரசாத் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவாக இருந்ததாகவும் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் திவாரி தெரிவித்தார்.
தேஜஸ்வி பதவி விலக வலியுறுத்தல்..: இதனிடையே, மக்களவைத் தேர்தலில் ஆர்ஜேடி படுதோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று, பிகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் பதவி விலக வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த எம்எல்ஏ மகேஷ்வர் பிரசாத் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், தேர்தலில் ஆர்ஜேடி தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று எதிர்க்கட்சி தலைவர் இருந்து தேஜஸ்வி பதவி விலக வேண்டும். அந்த பதவிக்கு யாதவ் சமூகத்தைச் சாராத எம்எல்ஏவை நியமிக்க வேண்டும். தேஜஸ்வி பதவி விலகாவிட்டால், வரும் 2020-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும், ஆர்ஜேடி தோற்று விடும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com