பாலியல் வன்கொடுமை வழக்கு:பகுஜன்சமாஜ் எம்.பி.யின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்ய தடை கோரி பகுஜன்சமாஜ் எம்.பி. அதுல் ராய் தொடுத்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது. 
பாலியல் வன்கொடுமை வழக்கு:பகுஜன்சமாஜ் எம்.பி.யின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு


பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்ய தடை கோரி பகுஜன்சமாஜ் எம்.பி. அதுல் ராய் தொடுத்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது. 
மக்களவைத் தேர்தலில், உத்தரப் பிரதேச மாநிலம், கோசி தொகுதியில் பகுஜன்சமாஜ் சார்பில் போட்டியிட்ட அதுல் ராய், சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 
உத்தரப் பிரதேசம், வாராணசியை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக அதுல் ராய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு உள்பட அவர் மீது சுமார் 16 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பாலியல் வன்கொடுமை வழக்கு தவிர மற்ற அனைத்து வழக்குகளிலும் அதுல் ராய், ஜாமீனில் வெளியில் உள்ளார். 
இந்நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்ஜாமீன் கோரி உத்தரப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் அதுல் ராய் மனு தாக்கல் செய்தார். ஆனால், இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி அவரது மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 
அதையடுத்து இந்த வழக்கில் தன்னை கைது செய்வதற்கு தடை விதிக்குமாறும், வழக்கை ரத்து செய்யுமாறும்  உச்சநீதிமன்றத்தில் அதுல் ராய் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான முந்தைய விசாரணையின்போது,  வழக்கை அவ்வளவு எளிதாக ரத்து செய்ய முடியாது. தவறு செய்யவில்லையென்றால், வழக்குக்கு எதிராக போராடுங்கள் என்று  அதுல் ராயிடம் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான விடுமுறை கால அமர்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அதுல் ராய் மீதான வழக்கு விவரங்கள் குறித்து நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அதுல் ராய் தரப்பு வழக்குரைஞர் கூறிய வழக்கு விவரங்களை கேட்ட பின்பு, மனுவை விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். அதையடுத்து மனுவை திரும்ப பெறுவதாக வழக்குரைஞர் தெரிவித்தார். அதையேற்ற நீதிபதிகள்,  மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com