முன்ஜாமீன் விவகாரம்: ராபர்ட் வதேராவுக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு குறித்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் பதிலைக்கோரி நோட்டீஸ் அனுப்ப தில்லி
முன்ஜாமீன் விவகாரம்: ராபர்ட் வதேராவுக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு குறித்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் பதிலைக்கோரி நோட்டீஸ் அனுப்ப தில்லி உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் பல கோடி ரூபாய் மதிப்புடைய  சொத்துகள் வாங்கியது தொடர்பாக ராபர்ட் வதேரா, அவரது உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோருக்கு எதிராக  சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் ராபர்ட் வதேரா, அரோரா ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முன்ஜாமீன் அளித்தது. அப்போது விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு செல்லக் கூடாது என்பது போன்ற நிபந்தனைகளை ராபர்ட் வதேரா, அரோரா ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்தது.
இந்நிலையில், ராபர்ட் வதேரா, அரோரா ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றத்தால் முன்ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து  தில்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது.
இந்த மனு, தில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சந்தர் சேகர் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரும் அமலாக்கத் துறை மனு குறித்து பதிலளிக்க ராபர்ட் வதேராவுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதி சந்தர் சேகர் உத்தரவிட்டார். இதேபோல், மனோஜ் அரோராவுக்கும் அமலாக்கத் துறையின் மனு குறித்து பதில்கேட்டு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக, நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதத்தின்போது அமலாக்கத் துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ராபர்ட் வதேரா விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுக்கிறார்; முன்ஜாமீன் அளிக்கும்போது குற்றத்தின் தீவிரம் குறித்து விசாரணை நீதிமன்றம் ஆலோசிக்கவில்லை என்று தெரிவித்தார்.
லண்டன் சொத்துகள் தொடர்பாக தங்கள் மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ராபர்ட் வதேராவும், அரோராவும் மறுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com