வேண்டாம் தலைமை: ராகுல் பிடிவாதம்

மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதில் ராகுல் காந்தி பிடிவாதமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேண்டாம் தலைமை: ராகுல் பிடிவாதம்


மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதில் ராகுல் காந்தி பிடிவாதமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் சமாதானம் செய்தபோதிலும் ராகுல் காந்தி தனது முடிவை மாற்றிக் கொள்ளாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது.  இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். ஆனால்,  அவரது முடிவை காங்கிரஸ் செயற்குழு ஒருமனதாக நிராகரித்து விட்டது.
எனினும், தனது ராஜிநாமா முடிவில் ராகுல் காந்தி பிடிவாதமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் திங்கள்கிழமை கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜிநாமா செய்யும் முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருக்கிறார். கட்சியின் மூத்த தலைவர்கள் அகமது படேல், கே.சி.வேணுகோபால் ஆகியோரைச் சந்தித்து தனது நிலைப்பாட்டை தெரிவித்து விட்டார்.  எனினும், புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு சிறிது அவகாசம் அளிப்பதாகவும், அதுவரை தலைவர் பதவியில் தொடர்வதாகவும் அவர்களிடம் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மேலும், தாம் வேறு எங்கேயும் சென்றுவிடப்போவதில்லை; தொடர்ந்து கட்சிக்காகப் பாடுபட இருப்பதாகவும் கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பிரியங்கா காந்தியின் பெயரை சிலர் பரிந்துரை செய்தபோது, அந்தப் பதவிக்கு எனது குடும்பத்தில் இருந்து ஒருவர் வரவேண்டிய தேவையில்லை; அந்தப் பதவிக்கு எனது சகோதரியின் பெயரை பரிசீலிக்க வேண்டாம் என்று ராகுல் காந்தி திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
அதுமட்டுமன்றி, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.பி.க்களையும் அவர் சந்திக்க மறுத்து விட்டார். மேலும், ஏற்கெனவே திட்டமிட்டிருந்த கட்சித் தலைவர்களுடனான சந்திப்புகள், கட்சி அலுவல்கள் அனைத்தையும் அவர் ரத்து செய்துவிட்டார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், இந்த தகவல்களை காங்கிரஸ் மறுத்து விட்டது.
காங்கிரஸ் தலைவர்கள் ராஜிநாமா: மக்களவைத் தேர்தலில் தங்கள் மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று, ஜார்க்கண்ட்  மாநிலத் தலைவர் அஜய் குமார், அஸ்ஸாம் மாநிலத் தலைவர் ரிபன் போரா ஆகியோர் தங்களது பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். இதேபோல், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகரும் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அவர்கள் தங்களுடைய பதவி விலகல் கடிதங்களை கட்சி மேலிடத்துக்கு அனுப்பியுள்ளனர்.
ஏற்கெனவே, உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர், மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் அசோக் சவாண், ஒடிஸா மாநிலத் தலைவர் நிரஞ்சன் பட்நாயக் தங்களது பதவியை ராஜிநாமா செய்து விட்டனர்.

வதந்தி பரப்ப வேண்டாம்
ஊடகங்கள், ஊகங்களை செய்தியாக வெளியிட வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:


தில்லியில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம், கடந்த 25-ஆம் தேதி ஜனநாயக முறைப்படி நடைபெற்றது. தலைவர்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதற்காக, அந்த கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தனர். தோல்வியில் இருந்து மீண்டு, கட்சியை வலுப்படுத்துவதற்கான கொள்கைகளை வகுப்பதற்காக இக்கூட்டம் நடைபெற்றது. மேலும், கட்சியை அமைப்பு ரீதியில் மாற்றம் செய்வதற்கு முழு அதிகாரமும் ராகுல் காந்திக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்னர் அறிக்கையாக வெளியிடப்பட்டன. 
வெளியார் எவருக்கும் அனுமதியின்றி நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தின் புனிதத்தை ஊடகங்கள் உள்பட ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், இதுபற்றி சில ஊடகங்கள், ஊகங்களையும், அனுமானங்களையும், கிசுகிசுக்களையும், வதந்திகளையும் செய்திகளாக வெளியிடுகின்றன. இது விரும்பத்தகாத, தேவையில்லாத விஷயங்களாகும். காங்கிரஸ் மேற்கொள்ளவிருக்கும் அடுத்தகட்ட முயற்சிகளை அனைவரும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

காங். ஆளும் 3 மாநிலங்களுக்கு நெருக்கடி
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததை அடுத்து, அக்கட்சி ஆளும் 3 மாநிலங்களில் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில், கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸால் வெற்றி பெற முடிந்தது. இதனால், அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர், பாஜக மூத்த தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் எம்எல்ஏக்களான ரமேஷ் ஜார்கிஹோளி, டாக்டர் சுதாகர் ஆகிய இருவரும் பாஜக மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணாவை பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்ததாகத் தெரிகிறது. அந்த மாநிலத்தில் மதச் சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி அரசை அகற்றுவதற்காக, பாஜகவுக்கு ஆதரவு அளிக்க, அவர்கள் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேபோல், ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் ஓரிடத்தில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. தேர்தல் தோல்வியால் அங்கு உள்கட்சிப்பூசல் நிலவுகிறது. தேர்தல் தோல்வி குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டும் என்று  மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் உதய் லால் அஞ்சனாவும், உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை அமைச்சர் ரமேஷ் மீனாவும் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.  தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மீதான அதிருப்தி காரணமாக,  அவர்கள் இந்த கோரிக்கையை விடுத்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இந்த தகவல்களை காங்கிரஸ் தலைமை மறுத்து விட்டது. இதேபோல், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்ற மத்தியப் பிரதேசத்திலும் அக்கட்சியின் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com