சுடச்சுட

  

  சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: ராஜீவ் குமாருக்கு சில ஆவணங்களை அனுப்பியது சிபிஐ

  By DIN  |   Published on : 29th May 2019 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  cbi_11


  சாரதா நிதிநிறுவன மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகாத கொல்கத்தா முன்னாள்  காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு சில ஆவணங்களை சிபிஐ அனுப்பியுள்ளது. தெற்கு கொல்கத்தாவில் உள்ள ராஜீவ் குமாரின் அலுவலகத்தில், அந்த ஆவணங்களை சிபிஐ அளித்துள்ளது.
  இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறுகையில், இது சம்மன் இல்லை; விசாரணை தொடர்பான முக்கிய ஆவணங்கள் ஆகும் என்றன.
  அதேபோல், ராஜீவ் குமாருக்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியிருப்பதாக வெளியான செய்திகளையும் அந்த வட்டாரங்கள் மறுத்தன.
  மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக விசாரணை நடத்த ராஜீவ் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. பின்னர், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. 
  இதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட சிபிஐ, வழக்கின் முக்கிய ஆவணங்கள் சிலவற்றை ராஜீவ் குமார் அழித்துவிட்டதாகவும், சில முக்கிய ஆவணங்களை சிபிஐயிடம் இருந்து மறைத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியது. 
  இதுதொடர்பாக  ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் சென்றபோது, அவர்களை அந்த மாநில காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அத்துடன், சிபிஐயின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 3 நாள்கள் தர்னாவில் ஈடுபட்டார். இதையடுத்து, விசாரணைக்கு ராஜீவ் குமார் ஒத்துழைக்க மறுப்பதாக கூறி, உச்சநீதிமன்றத்தில் சிபிஐ முறையிட்டது. 
  இந்த விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு ஆஜராக ராஜீவ் குமாருக்கு உத்தரவிட்டது. அத்துடன், ராஜீவ் குமாரை சிபிஐ கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்து கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி உத்தரவிட்டது.
  இதனிடையே, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக்கோரி சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தொடர்பான விசாரணையின்போது, ராஜீவ் குமாருக்கு எதிரான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ராஜீவ் குமாரை கைது செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, உச்சநீதிமன்றம் கடந்த 17-ஆம் தேதி திரும்பப் பெற்றது.
  எனவே, ராஜீவ் குமாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ விரும்புகிறது. மேலும், சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு,  கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் திங்கள்கிழமை நேரில் ஆஜராகும்படி ராஜீவ் குமாருக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தது. ஆனால் சிபிஐ அதிகாரிகள் முன்பு அவர் ஆஜராகவில்லை.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai