சுடச்சுட

  

  ஜம்மு-காஷ்மீரின் நலனுக்காக பிற கட்சிகளுடன் இணைந்து செயல்படத் தயார்: மக்கள் ஜனநாயகக் கட்சி

  By DIN  |   Published on : 29th May 2019 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  ஜம்மு-காஷ்மீரின் நலனுக்காக மற்ற கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.
  மக்களவைத் தேர்தலில் ஜம்மு-காஷ்மீரிலுள்ள 6 தொகுதிகளில், பாஜக 3 தொகுதிகளையும், தேசிய மாநாட்டுக் கட்சி 3 தொகுதிகளையும் கைப்பற்றியது. மக்கள் ஜனநாயகக் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் படுதோல்வியைச் சந்தித்தன. இந்நிலையில், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் அக்கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தியை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
  இந்தக் கூட்டம் தொடர்பாக, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஃபி அகமது மீர் கூறியதாவது:
  தேர்தலில் கட்சியின் செயல்பாடு, கட்சியை பலப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், ஜம்மு-காஷ்மீரில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலை ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மக்களின் அரசியல் அதிகாரங்களைப் பறிப்பது உள்ளிட்ட பல்வேறு உள்நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, மாநிலத்துக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அங்கீகாரத்தைப் பறிக்க முயற்சி நடைபெற்று வருவதாகக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
  மாநிலத்தின் அரசியல் ஸ்திரத்தன்மையைக் குலைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மக்களிடையேயும் மாநிலத்திலும் பிரிவினையை ஏற்படுத்துவதைத் தடுக்க பிராந்திய கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படுவது அவசியம் என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
  ஜம்மு-காஷ்மீர் மக்களின் உரிமைகளைக் காக்கும்பொருட்டு, அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்றும் தலைவர்கள் தெரிவித்தனர். மாநில நலனுக்காக மற்ற கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயல்படுவது என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai