சுடச்சுட

  

  பாஜகவில் இணைந்த 3 மேற்கு வங்க எம்எல்ஏக்கள், 50 கவுன்சிலர்கள்

  By DIN  |   Published on : 29th May 2019 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  மேற்கு வங்க மாநிலத்தில், திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு எம்எல்ஏ என 3 எம்எல்ஏக்களும், 50க்கும் மேற்பட்ட கவுன்சிலர்களும் பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தனர். 
  மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தற்போதைய பாஜக மூத்த தலைவரும், திரிணமூல் காங்கிரஸின் முன்னாள் தலைவர்களுள் ஒருவரான முகுல் ராயின் மகனும், பிஜ்ப்பூர் தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏவுமான சுப்ரங்ஷு ராய், மற்றொரு திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ துஷார்காந்தி பட்டாச்சார்யா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ தேவேந்திர நாத் ராய் ஆகிய மூன்று எம்எல்ஏக்களும் தில்லியில் பாஜகவில் இணைந்தனர். அவர்களுடன், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 50 கவுன்சிலர்களும் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். 
  முன்னதாக, சுப்ரங்ஷு ராய் மற்றும் தேவேந்திர நாத் ராய் ஆகிய இரண்டு எம்எல்ஏக்களும், கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாகக் கூறி  அந்தந்த கட்சியின் தலைமையால் இடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். 
  இதுகுறித்து பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா, மூத்த தலைவர் முகுல் ராய் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இனி வரும் தினங்களில் திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த பல எம்எல்ஏக்கள், அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மீது கொண்ட அதிருப்தியின் காரணமாக பாஜகவில் இணையப் போவது உறுதி. 
  மக்களவைத் தேர்தலில், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் எதிர்பார்த்த வெற்றியை பெறாததற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியிருந்து, ராஜிநாமா செய்ய விரும்பியதாக மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். அது ஒரு நாடகம். அவருக்கு, பதவி ஆசை பிடித்துள்ளதால் தனது பதவியை விட்டு கொடுக்க மாட்டார். அதேசமயம் மக்கள் மம்தாவை ஆட்சியில் இருந்து அகற்றி விட தீர்மானித்து விட்டனர். 
  வரும் 2021ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியால் எதிர்க்கட்சியாக கூட வர முடியாது.   
  தற்போது, திரிணமூல் காங்கிரஸில் இருந்து ஏராளமானோர் விலகி பாஜகவில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். வரும் வாரங்களில் மேலும் பலர் பாஜகவில் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளனர். 
  தற்போது, 50க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். இதன்மூலம், குறைந்தது 3 நகராட்சி மன்றங்களில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. 
  மேற்கு வங்கத்தில், பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டபோது, மம்தா பானர்ஜியின் சர்வாதிகார நடவடிக்கைகளின் காரணமாக அதிருப்தியில் உள்ள திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும், கட்சியைச் சேர்ந்த பல பிராந்திய தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அவர் கூறியது தற்போது உண்மையாகி வருகிறது. 
  வரும் 2021ஆம் ஆண்டு வரை மம்தாவின் ஆட்சி நடைபெற வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். ஆனால், அவரது நடவடிக்கைகளால் இந்த ஆட்சி தானாகவே கவிழ்ந்து விடும். அதுபோன்ற சூழல் ஏற்பட்டால் யாராலும் அவருக்கு உதவி செய்ய இயலாது என்று அவர்கள் தெரிவித்தனர்.  
  பேட்டியின்போது, மம்தாவின் ஆட்சியை கவிழ்க்க, திரிணமூல் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை முகுல் ராய் நிராகரித்தார். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai