சுடச்சுட

  

  மக்கள் தொகையை கட்டுப்படுத்தக் கோரி மனு: தில்லி உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

  By DIN  |   Published on : 29th May 2019 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை தில்லி உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
  நாட்டில் மக்கள்தொகை அதிகரித்து வருவதால், குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இயற்கை வளங்கள் மாசடைகின்றன. வேலையின்மை பிரச்னை அதிகரித்து வருகிறது. வளங்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனால் மக்கள் தொகையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்குரைஞரும், பாஜக நிர்வாகியுமான அஸ்வினி குமார் உபாத்யாய தில்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.
  இந்த மனு குறித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் தலைமையிலான அமர்வு முன்பு வழக்குரைஞர் தெரிவித்தார். அதை கேட்ட நீதிபதிகள், இந்த மனுவை புதன்கிழமை(மே 29) விசாரிப்பதாக தெரிவித்தனர்.
  அஸ்வினி தாக்கல் செய்த மனுவில், அரசமைப்புச் சட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த தேசிய ஆணையம், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல பரிந்துரைகளை அளித்தது. சுமார் 2 ஆண்டுகள் ஆய்வு செய்து மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கான சட்டத்தை அந்த ஆணையம் பரிந்துரைந்தது. அதை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அரசமைப்புச் சட்டத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட முறை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் நாட்டுக்கு மிகவும் தேவையான மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் நிறைவேற்றப்படவில்லை. அந்த சட்டத்தை கொண்டு வந்தாலே நாட்டின் 50 சதவீத பிரச்னைகள் குறைந்து விடும்.
  அரசு வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள், மானியம், அரசு உதவி பெற விரும்புபவர்களுக்கு இரு குழந்தைகளுக்கு மேல் இருக்க கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதிக்கலாம். இந்தியாவின் மக்கள்தொகை சீன மக்கள்தொகையை தாண்டும் நிலை தற்போது உள்ளது. அதுமட்டுமன்றி, வங்கதேசத்தை சேர்ந்தவர்களும், ரோஹிங்கயா முஸ்லிம்களும் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர். மக்கள் தொகை அதிக அளவில் இருப்பதே, ஊழலுக்கு முதல் காரணம். மக்கள் தொகையை கட்டுப்படுத்தாவிட்டால், தூய்மை இந்தியா, பெண் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்கள் வெற்றி பெறாது என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai