கோவா: புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு

கோவா சட்டப்பேரவைக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 புதிய எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை பதவியேற்றனர். அதையடுத்து சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது.


கோவா சட்டப்பேரவைக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 புதிய எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை பதவியேற்றனர். அதையடுத்து சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது.
கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் மற்றும் அந்த மாநில முன்னாள் துணை முதல்வர் பிரான்சிஸ் டிசெளசா ஆகியோர் மரணமடைந்ததையடுத்து பனாஜி மற்றும் மாபுசா பேரவைத் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன. மேலும், காங்கிரஸின் 2 எம்எல்ஏக்கள் சுபாஷ் ஷிரோத்கர், தயானந்த் சோப்டே ஆகியோர் பாஜகவுக்கு கட்சி மாறியதால், தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதையடுத்து அந்த தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காலியாக இருந்த 4 இடங்களுக்கு கடந்த மாதம் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் கடந்த 23-ஆம் வெளியானது. இதில் பாஜக 3 இடங்களையும், காங்கிரஸ் ஓரிடத்தையும் கைப்பற்றியது.
பாஜக சார்பில் சுபாஷ் ஷிரோத்கர், தயானந்த் சோப்டே, ஜோஷுவா டி-சில்வா ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் அடனாசியோ மான்செரெட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்கள் நால்வரும் செவ்வாய்க்கிழமை பதவியேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அந்த மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் உள்பட பலரும் பங்கேற்றனர். அதையடுத்து கோவா சட்டப்பேரவையில் 17 இடங்களைக் கொண்ட தனிப்பெரும் கட்சியாக பாஜக உள்ளது.
40 தொகுதிகள் கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 13 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், கோவா பார்வர்டு பிளாக், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களுடன் கூட்டணி வைத்து பாஜக ஆட்சியைப் பிடித்தது.
இந்நிலையில், இடைத்தேர்தலுக்கு பின்னர், பாஜகவின் பலம் 17-ஆகவும், காங்கிரஸின் பலம் 15-ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com