பயங்கரவாத ஒழிப்பு, சட்டவிரோத குடியேற்றத் தடுப்பு: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற புதிய அரசு முனைப்பு

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை, சட்டவிரோத குடியேற்றத் தடுப்பு உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மத்தியில் அமையும் பாஜக தலைமையிலான அரசு முனைப்பு காட்டும்


பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை, சட்டவிரோத குடியேற்றத் தடுப்பு உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மத்தியில் அமையும் பாஜக தலைமையிலான அரசு முனைப்பு காட்டும் என்று தெரியவந்துள்ளது. ஏனெனில், இவை பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்களாகும்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பு சங்கல்ப பத்ர (உறுதி மொழிப் பத்திரம்) என்ற பெயரில் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், பயங்கரவாதத்தை எந்த வகையிலும் சகித்துக் கொள்ள மாட்டோம். பயங்கரவாதம் மற்றும் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினருக்கு முழு சுதந்திரம் வழங்கப்படும். தேசப் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்பட மாட்டாது. வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோதமாக ஊடுருவுபவர்களைத் தடுக்க  நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 
தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), நாட்டின் பல பகுதிகளிலும் அமல்படுத்தப்படும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்குவது உறுதி செய்யப்படும் உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் இடம் பெற்றிருந்தன.
இப்போது, தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், வாக்குறுதிகளை முழுவீச்சில் மத்திய அரசு அமல்படுத்தும் என்று தெரியவந்துள்ளது. அதன்படி, பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளையும், நக்ஸல் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை ஒடுக்கும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசு தீவிரம் காட்ட இருக்கிறது. புதிய அமைச்சரவைப் பதவியேற்ற பிறகு இது தொடர்பான பல அதிரடி முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. நாட்டின் எந்தப் பகுதியிலும், முக்கியமாக ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட எல்லைப் பகுதி மாநிலங்களில் பயங்கரவாதத்துக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க புதிய உத்திகள் வகுக்கப்படவுள்ளது.  உள்நாட்டில் பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி திரட்டுவோர், ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வோரும் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள். தேசவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது எவ்வித தயவும் காட்டப்படாது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையடுத்து, நமது நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுபவர்களை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏனெனில், இதுபோன்ற ஊடுருவல்காரர்கள்தான் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அதிகம் துணை போகின்றனர். ஏற்கெனவே சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்ற தேசிய குடிமக்கள் பதிவேடு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விரைவில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.
இறுதியாக, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. இந்த நடவடிக்கைக்கு ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்புகள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பும் என்று மத்திய அரசு கருதுகிறது. எனவே, உரிய முன்னேற்பாடுகளுடன் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
காஷ்மீர் பண்டிட்டுகள் பாதுகாப்பாக தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீர், மேற்கு பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்தவர்களின் மறுகுடியமர்வுக்கு போதிய நிதியுதவி அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளும் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது
குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com