மேற்கு வங்கம்: திரிணமூல் ஆக்கிரமித்த 150 மார்க்சிஸ்ட் அலுவலகங்கள் மீட்பு

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த தங்கள் கட்சியின் 150 அலுவலகங்களை மீட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.


மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த தங்கள் கட்சியின் 150 அலுவலகங்களை மீட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
கடந்த 4 நாள்களில் இந்த அலுவலகங்கள் மீட்கப்பட்டன என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான நிலோத்பல் பாசு தெரிவித்தார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 22-இல் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பாஜக 18 இடங்களிலும் காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. கடந்த முறை 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பாஜக, இம்முறை 18 இடங்களில் வெற்றி பெற்று, தனது பலத்தை நிரூபித்துள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி வலுவிழந்துள்ள சூழலை பயன்படுத்தி, அக்கட்சியினரால் ஏற்கெனவெ ஆக்கிரமிக்கப்பட்ட தங்களது அலுவலகங்களை மீட்கும் நடவடிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் நிலோத்பல் பாசு கூறியதாவது: கடந்த 2011சட்டப் பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதல் முறையாக ஆட்சியமைத்தபோது, பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களை திரிணமூல் தொண்டர்கள் ஆக்கிரமித்தனர். அந்த அலுவலகங்களில் தங்களது கொடியை ஏற்றினர். 
கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து பார்க்கும்போது, இப்போதைய மக்களவைத் தேர்தலுக்கு பின் திரிணமூல் காங்கிரஸ் வலுவிழந்துள்ளது. 
இதைத் தொடர்ந்து, அக்கட்சியால் ஆக்கிரமிக்கப்பட்ட அலுவலகங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீட்டு வருகின்றனர். பங்குரா, புருலியா, கூச்பிகார், பர்தமான், ஹுக்ளி, வடக்கு 24 பர்கனாஸ், ஹெளரா உள்ளிட்ட இடங்களில் சுமார் 150 அலுவலகங்கள் கடந்த 4 நாள்களில் மீட்கப்பட்டுள்ளன. 
பாஜகவின் உதவியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com