சுடச்சுட

  
  pemagandu

  அருணாசலப் பிரதேச முதல்வராக பதவியேற்கும் பெமா காண்டுவுக்கு புதன்கிழமை பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் ஆளுநர் பி.டி.மிஸ்ரா.


  அருணாசலப் பிரதேசத்தின் முதல்வராக, பாஜக மூத்த தலைவர் பெமா காண்டு மீண்டும் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார். இவர், அருணாசலப் பிரதேசத்தின் 10-ஆவது முதல்வர் ஆவார்.
  அருணாசலப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 41 இடங்களை பாஜக கைப்பற்றியது. இதையடுத்து, முதல்வராக மீண்டும் பெமா காண்டு புதன்கிழமை பதவியேற்றார்.
  இடா நகரில் உள்ள டோர்ஜி காண்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெமா காண்டுவுக்கு ஆளுநர் பி.டி.மிஸ்ரா, பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பெமா காண்டுவுடன் துணை முதல்வர் செளனா மெயின் உள்பட 11 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
  பதவியேற்பு விழாவில், அஸ்ஸாம் முதல்வர் சர்வானந்த சோனோவால், மேகாலய முதல்வர் கான்ராட் சங்மா, நாகாலாந்து முதல்வர் நெய்பியூ ரியோ, துணை முதல்வர் ஒய்.பட்டான், திரிபுரா முதல்வர் விப்லப் தேவ், மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங், பாஜக பொதுச் செயலர் ராம் மாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  ஏற்கெனவே பெமா காண்டுவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த செளனா மெயின் உள்பட 6 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இரு புதுமுகங்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பதவியேற்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பெமா காண்டு கூறியதாவது:
  அருணாசலப் பிரதேசத்தில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. எனவே, இது வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும். இந்த மாநில சட்டப் பேரவைத் தேர்தலில், பாஜகவை வெற்றிபெறச் செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஊழலற்ற, வெளிப்படையான, நேர்மையான நல்லாட்சியை வழங்குவேன். கல்வி, மருத்துவம், சட்டம்-ஒழுங்கு ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஒவ்வொரு துறையிலும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது குறித்து ஆராயப்படும் என்றார் பெமா காண்டு.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai