சுடச்சுட

  
  congre

  ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக தொடர வலியுறுத்தி சென்னையில்  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸார்.


  நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சோதனையான நேரத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  தலைவராக ராகுல் காந்தி நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தேனாம்பேட்டை காமராஜ்பவனில் அருகில் இருந்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காமராஜர் அரங்கம் முன் உள்ள காமராஜர் சிலை வரை பேரணியாக வந்தனர். 
  அகில இந்திய செயலாளர்கள் சஞ்சய் தத், ஸ்ரீவல்ல பிரசாத், சட்டப்பேரவைக் காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வீ.தங்கபாலு,திருநாவுக்கரசர், மாநிலப் பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்தனர். பேரணியின் இறுதியில், காமராஜர் சிலை முன்பு ராகுல் காந்தி தலைவராக நீடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
  அங்கு நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
  மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்குப் பொறுப்பேற்று தலைமைப் பொறுப்பிலிருந்து விலகப் போவதாக ராகுல் காந்தி முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 
  இந்த செய்தி அறிந்து இந்தியா முழுவதிலும் இருக்கும் லட்சோப லட்சம் காங்கிரஸ் தொண்டர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். 
   மக்களவை தேர்தலில் பாஜகவையும், நரேந்திர மோடியையும் எதிர்த்து தேசிய அரசியலில் எதிர்கொண்டு கடுமையான பிரசாரம் செய்தவர், தலைவர் ராகுல் காந்தி. 
  மக்களவைக்கு உள்ளேயும், மக்கள் மன்றத்திலும் அவரது பிரசார வலிமையினால் பாஜக திக்குமுக்காடிப் போனதை அனைவரும் அறிவர். பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்கிற சூழலை ஒரு கட்டத்தில் உருவாக்கியதில் தலைவர் ராகுல் காந்திக்குப் பெரும் பங்கு உண்டு. ஆனால் தேர்தல் தீர்ப்பு வேறு விதமாக அமைந்து விட்டது.
  நேரு பாரம்பரியத் தலைமை என்பது ஜனநாயகத்தில் தேர்தல் மூலமாக மக்களின் விருப்புரிமையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். அதேபோல, இந்தியாவின் ஒற்றுமைக்கு பேராபத்து ஏற்பட்டபோது அதற்காக இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இத்தகைய தியாகத்தைச் செய்த காரணத்தினால்தான் நேரு பாரம்பரிய தலைமையை மக்கள் போற்றி, ஆதரித்து வருகின்றனர். இதை குடும்ப அரசியல் என்று கொச்சைப்படுத்துவதை விட அரசியல் காழ்ப்புணர்ச்சி வேறெதுவும் இருக்க முடியாது.
  எனவே, தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சோதனையான நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமையைத் தொடர்ந்து ஏற்று வழிநடத்திட வேண்டுமென தமிழகத்தில் உள்ள லட்சோப லட்சம் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் சார்பாக ராகுலை மன்றாடி கேட்டுக் கொள்கிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  2 தொண்டர்கள் தீக்குளிக்க முயற்சி: முன்னதாக, பேரணியின்போது 2 காங்கிரஸ் தொண்டர்கள்  உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தனர். அவர்களைக் காங்கிரஸ் தொண்டர்கள் தடுத்து நிறுத்தி, தண்ணீர் ஊற்றிக் காப்பாற்றினர்.

  தேசிய செயலர் சஞ்சய் தத் வலியுறுத்தல்
  ஜனநாயகத்தைப் பாதுகாக்க காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி நீடிக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் தேசிய செயலர் சஞ்சய் தத் வலியுறுத்தினார்.
  புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
  புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தொடரும். வளர்ச்சித் திட்டங்களைத் தடுத்த துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, மத்திய அரசுக்கு எதிராக மக்களவைத் தேர்தலில் புதுவை மக்கள் சிறந்ததொரு தீர்ப்பை அளித்துள்ளனர்.
  அரசியல் அனுபவம் கொண்ட மூத்த தலைவர் வெ.வைத்திலிங்கத்தை மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்திருப்பதால், புதுவை மக்களின் பிரச்னைகளுக்கு மக்களவையில் அவர் குரல் கொடுப்பார். 
  நாட்டின் ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி நீடிக்க வேண்டும் என்றார் அவர்.
  முன்னதாக, புதுவை மாநில காங்கிரஸ்  செயற்குழுக் கூட்டத்தில் சஞ்சய் தத் பேசியதாவது: 
  கடந்த சில நாள்களாக காங்கிரஸ் கட்சியினர் மன உளைச்சலில் உள்ளனர். இதற்குக் காரணம் ராகுல் காந்தி தனது பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக அறிவித்ததுதான். அவரது இந்த முடிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
  பாஜகவின் வெற்றி தற்காலிகமானது. நாட்டின் ஜனநாயகம், ஒருமைப்பாடு ஆகியவை காக்கப்பட வேண்டும். அதற்கு ராகுல் காந்தி தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும். எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பெறும். 
  அதற்கு அடையாளம்தான் புதுவையின் வெற்றி. பாஜகவை எதிர்க்க அனைத்துக் கட்சிகளும் ராகுல் காந்தி தலைமையில் ஓரணியில் திரள வேண்டியது அவசியம் என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai