சுடச்சுட

  

  கெலாட் ராஜிநாமா செய்ய வேண்டும்: உ.பி. துணை முதல்வர் தினேஷ் சர்மா

  By DIN  |   Published on : 30th May 2019 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தானில் காங்கிரஸுக்கு ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை அசோக் கெலாட் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், உத்தரப் பிரதேச துணை முதல்வருமான தினேஷ் சர்மா வலியுறுத்தியுள்ளார்.
  ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
  மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தானில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ளது. இதிலிருந்து ராஜஸ்தான் மக்களின் நம்பிக்கையை அசோக் கெலாட் அரசு இழந்து விட்டது தெரிகிறது.
  இந்தத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, முதல்வர் பதவியை கெலாட் ராஜிநாமா செய்ய வேண்டும். ஜோத்பூர் தொகுதியில் தமது மகனை கூட அவரால் வெற்றி பெற செய்ய முடியவில்லை.
  முதல்வர் பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை கெலாட் இழந்து விட்டார் என்றார்.
  ராஜஸ்தானில் அசோக் கெலாட் அரசை கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்த கேள்விக்கு சர்மா பதிலளிக்கையில், கட்சித் தாவலை அடிப்படையாகக் கொண்டு ஆட்சியைப் பிடிப்பதில் பாஜகவுக்கு நம்பிக்கை கிடையாது. அதேநேரத்தில் காங்கிரஸ் தலைவர்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டால், அதற்கு பாஜக பொறுப்பாகாது. வீர சாவர்க்கரின் பெயரில் இருந்து வீர என்ற வார்த்தையை ராஜஸ்தான் அரசு நீக்கியுள்ளது. இது கெலாட் அரசின் எதிர்மறை செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது என்றார்.
  மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25 தொகுதிகளில் பாஜக 24இல் வென்றது. அக்கட்சியின் கூட்டணி கட்சியான ராஷ்ட்ரீய லோக் தந்திரிக் கட்சி ஒரு தொகுதியை கைப்பற்றியது. ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு ஆட்சி நடைபெறுகிறது. ஆனால் மக்களவைத் தேர்தலில் அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai