சுடச்சுட

  
  kejrival


  நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலை பிரதமர் மோடிக்கும், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்குமான போட்டியாகவே மக்கள் பார்த்தார்கள். அதனால்தான், ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 
  இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கேஜரிவால் இதைத் தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தில்லியிலும் அதன் அண்டை மாநிலங்களிலும் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியடைந்தது. குறிப்பாக தில்லியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஆளும் ஆம் ஆத்மி கட்சி, 7 மக்களவைத் தொகுதிகளிலும் படுதோல்வியடைந்து. பாஜக வேட்பாளர்கள் பர்வேஷ் வர்மா (மேற்கு தில்லி) ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ் (வடமேற்கு தில்லி) ஆகியோர் சுமார் ஐந்தரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் 3 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்தனர்.
  இந்நிலையில், தேர்தல் தோல்வியால் சோர்ந்து போயுள்ள ஆம் ஆத்மி தொண்டர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு கேஜரிவால் புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
  ஆம் ஆத்மி தொண்டர்கள் மிகச் சிறப்பாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் போட்டியிட்ட வேட்பாளர்களில் ஆம் ஆத்மி வேட்பாளர்களே சிறந்தவர்கள் என்பதைப் பலரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தத் தேர்தலை பிரதமர் மோடிக்கும், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்குமான போட்டியாகவே மக்கள் பார்த்தனர். அதன் அடிப்படையிலேயே வாக்களித்துள்ளனர்.
  இந்தத் தேர்தலில் ஏன் நமக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைத் தெளிவாக மக்களுக்குச் சொல்ல நாம் தவறிவிட்டோம். ஆனால், சிறிய தேர்தலான தில்லி சட்டபேரவைத் தேர்தலில் கல்வி, சுகாதாரம், குடிநீர், மின்சாரம், ஓய்வூதியம் ஆகிய துறைகளில் தில்லி அரசு மேற்கொண்ட மக்கள் பணிகளைப் பார்த்து ஆம் ஆத்மிக்கே தில்லி மக்கள் வாக்களிப்பார்கள். எனவே, மனம் தளராமல் சட்டப்பேரவைத் தேர்தலில் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai