சுடச்சுட

  

  பதவி விலகும் முடிவில் ராகுல் உறுதி: வீடு முன் குவிந்த தொண்டர்கள்

  By DIN  |   Published on : 30th May 2019 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rahul


  காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் ராகுல் காந்தி தொடர்ந்து பிடிவாதமாக உள்ளதால், அக்கட்சிக்குள் குழப்பம் நீடித்து வருகிறது. அவரை சமாதானப்படுத்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ராகுல் தனது முடிவை கைவிட வலியுறுத்தி, தில்லியில் அவரது இல்லம் முன் காங்கிரஸ் தொண்டர்கள் புதன்கிழமை குவிந்தனர்.
  மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. வெறும் 52 இடங்களில் மட்டுமே அக்கட்சியால் வெற்றி பெற முடிந்தது. இந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து விவாதிப்பதற்காக கட்சியின் செயற்குழு கூட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக ராகுல் அறிவித்தார். ஆனால், அவரது முடிவை காங்கிரஸ் செயற்குழு ஒருமனதாக நிராகரித்து விட்டது. மேலும், கட்சியை மறுசீரமைக்க ராகுலுக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  எனினும், தனது ராஜிநாமா முடிவில் ராகுல் காந்தி தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தனது குடும்பத்தை சாராத நபரை பரிசீலிக்கும்படியும், பொருத்தமான நபர் தேர்வு செய்யப்படும் வரை பதவியில் நீடிப்பதாகவும் அவர் கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
  இதனிடையே, தனது தாயாரும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவருமான சோனியா காந்தி, தனது சகோதரி பிரியங்கா, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா ஆகியோரை மட்டும் ராகுல் செவ்வாய்க்கிழமை சந்தித்தார். வேறு தலைவர்களை சந்திப்பதை அவர் தொடர்ந்து தவிர்த்து வருகிறார்.
  முன்னதாக, செயற்குழு கூட்டத்தின்போது, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மீது ராகுல் கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.  தனது மகன் வைபவ் போட்டியிட்ட ஜோத்பூர் தொகுதியில்தான் அசோக் கெலாட் அதிக நாள்கள் பிரசாரம் செய்தார் என்று ராகுல் குற்றம்சாட்டியதாக அக்கூட்டத்தில் பங்கேற்ற சில தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.
  வீடு முன் குவிந்த தொண்டர்கள்: ராகுல் தனது முடிவை கைவிட வேண்டும் என்று அவரது கட்சியினரும், கூட்டணி கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். கட்சியை அனைத்து நிலைகளிலும் அவர் சீரமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர்.
  இந்நிலையில், தில்லியில் துக்ளக் லேனில் உள்ள ராகுலின் இல்லம் முன் காங்கிரஸ் தொண்டர்கள் புதன்கிழமை குவிந்தனர். உங்களுடன் (ராகுல்) நாங்கள் இருக்கிறோம், பதவி விலகும் முடிவை கைவிடுங்கள் என்று தொண்டர்கள் கோஷமிட்டனர். சில தொண்டர்கள் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனிடையே, தில்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித், ராகுலை சந்திப்பதற்காக அவரது இல்லத்துக்கு புதன்கிழமை வந்தார். ஆனால், அவரை ராகுல் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai