சுடச்சுட

  

  மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பில்லை: மம்தா நிலைப்பாட்டில் மாற்றம்

  By DIN  |   Published on : 30th May 2019 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mamtha


  தில்லியில் வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் நரேந்திர மோடி பிரதமராக மீண்டும் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க போவதில்லை என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
  மோடியின் அழைப்பை ஏற்று அவரது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக  மம்தா பானர்ஜி செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது தனது நிலைப்பாட்டை திடீரென அவர் மாற்றிக் கொண்டுள்ளார்.
  இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: புதிய பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துகள். அரசியலமைப்பு முறைப்படி அனுப்பப்பட்ட அழைப்பை ஏற்று, பதவியேற்பு விழாவில் பங்கேற்க திட்டமிட்டிருந்தேன். எனினும், கடந்த ஓராண்டு காலமாக, மேற்கு வங்கத்தில் அரசியல் ரீதியில் 54 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது. இது முற்றிலும் பொய்யாகும்.
  இந்த மரணங்கள் அனைத்தும், சொந்த பகை, குடும்பத் தகராறு, சொத்து தகராறு உள்ளிட்டவற்றால் நிகழ்ந்தவை. இது அரசியல் ரீதியிலான கொலைகள் கிடையாது. அதற்கான ஆதாரமும் இல்லை.
  எனவே, மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதில்லை என முடிவு செய்துவிட்டேன். இதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
  மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, மம்தா பானர்ஜிக்கும், நரேந்திர மோடிக்கும் இடையே பரவலாக வார்த்தை யுத்தங்கள் நடைபெற்றது. இரு தலைவர்களும் பரஸ்பரம் கடுமையான குற்றச்சாட்டுகளை ஒருவர் மீது ஒருவர் முன்வைத்தனர்.
  கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் 2 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றிருந்தது. இந்த மக்களவைத் தேர்தலில், மேற்கு வங்கத்தில் பாஜக 18இல் வெற்றி பெற்றது. மேற்கு வங்கத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
  மேற்கு வங்க அரசியல் வரலாற்றில், பாஜக இத்தனை அதிக மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றது இதுவே முதல்முறையாகும்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai