சுடச்சுட

  

  பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் எத்தனை பேர் பங்கேற்கிறார்கள் தெரியுமா?

  By IANS  |   Published on : 30th May 2019 12:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi_salute

   

  புது தில்லி: இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெறும் பிரதமர் பதவியேற்பு விழாதான் இதுவரை அந்த மாளிகையில் நடந்த பிரம்மாண்ட விழாவாக அமைய உள்ளது.

  குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாக்களிலேயே மோடி பதவியேற்பு விழாதான் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிகழ்வாக அமையும் என்று செய்தித் தொடர்பு செயலாளர் அஷோக் மாலிக் கூறியுள்ளார்.

  இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ள பதவியேற்பு  விழாவில் மிக முக்கியப் பிரமுகர்கள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் என ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 8,000 பேர் பங்கேற்கிறார்கள்.

  நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக வியாழக்கிழமை பதவியேற்க இருக்கிறார். அவருடன் மத்திய அமைச்சர்களும் பதவியேற்க இருக்கின்றனர். தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இரவு 7 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்க இருக்கிறார்.

  கடந்த முறைபோல இந்த முறையும் குடியரசுத் தலைவர் மாளிகையின் வெளிமுற்றத்தில் வைத்து பதவியேற்பு விழா நடைபெற இருக்கிறது. இதற்காக தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

  மேலும் படிக்க: மோடி பதவியேற்பு விழா சிறப்பு: நாவில் எச்சில் ஊற வைக்கும் அந்த ரெசிபி பற்றி கிடைத்த ரகசிய தகவல்

  பெரும்பாலும் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில்தான் பதவியேற்பு விழா நடைபெறும். எனினும், அதிக அளவில் விருந்தினர்கள் பங்கேற்பதால் கடந்தமுறையைப் போல இப்போதும் வெளிமுற்றம் தேர்வு செய்யப்பட்டது. இந்த முறை 8,000-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. 

  குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் இவ்வளவு அதிகமானோர் பங்கேற்பது இதுவே முதல் முறை. மேலும், பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் இவ்வளவு அதிகமானோர் பங்கேற்பதும் இதுவே முதல்முறை. 

  கடந்த முறை பதவியேற்பு நிகழ்ச்சியில் சுமார் 5,000 பேர் பங்கேற்றனர். இதற்கு முன் முன்னாள் பிரதமர்கள் சந்திரசேகர், வாஜ்பாய் ஆகியோர் குடியரசுத் தலைவர் மாளிகையின் வெளிமுற்றத்தில் பதவியேற்றுள்ளனர்.

  இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, வெளிநாட்டுத் தலைவர்கள், உள்நாட்டு அரசியல் தலைவர்கள், மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், பல்துறை வல்லுநர்கள், திரைப்படத் துறை பிரபலங்கள் என பலர் பங்கேற்கின்றனர். இரவு 7 மணி முதல் 8.30 மணிவரை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை சார்பில் இரவு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  மத்திய அமைச்சர்கள்: கடந்த அமைச்சரவையில் இடம்பெற்ற மூத்த அமைச்சர்களான ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ரவி சங்கர் பிரசாத், பியூஷ் கோயல், நரேந்திர சிங் தோமர், பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோர் மீண்டும் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியுடன் 65 பேர் வரை அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் என்று தெரிகிறது.

  சோனியா, ராகுல் பங்கேற்பர்: ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai