குடிநீர்த் தட்டுப்பாடு: முதல்வர் ஆலோசனை

சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க கூடுதலாக குடிநீர் விநியோகிக்க முதல்வர்
தமிழகத்தில் குடிநீர் விநியோகம் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
தமிழகத்தில் குடிநீர் விநியோகம் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.


சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க கூடுதலாக குடிநீர் விநியோகிக்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். குறுகலான தெருக்கள், கிராமப்புறங்களில் சிறிய வாகனங்கள் மூலமாக குடிநீர் விநியோகிக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் குடிநீருக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 
இந்தத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியமும் தொடர்ந்து குடிநீரை விநியோகம் செய்து வருகின்றன.
 இந்த நிலையில், சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்திட முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரும், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் உள்ளிட்ட உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
 தமிழகம் முழுவதும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள பகுதிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் விரிவாக விளக்கினார்.
சிறிய வாகனங்கள் மூலம் குடிநீர் விநியோகிக்க அறிவுறுத்தல்: சென்னை போன்ற பெருநகரங்களில் மிகப்பெரிய லாரிகளைக் கொண்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த லாரிகள் நுழைய முடியாத குறுகலான தெருக்களில் சிறிய வகை வாகனங்கள் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை அதிகப்படுத்த வேண்டுமென அதிகாரிகளுக்கு முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். மேலும், குடிநீர்த் தட்டுப்பாடு உள்ள கிராமப்புறங்கள் எவை எவை என்பதை அறிந்து அவற்றுக்கும் தேவையான நீரை அளிக்க வேண்டுமென அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, அரசுத் துறை உயரதிகாரிகள் கூறுகையில், குடிநீர்த் தட்டுப்பாடு தொடர்பான வழக்கமான ஆய்வுக் கூட்டத்தையே முதல்வர் பழனிசாமி மேற்கொண்டார். குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்க ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகளை அரசுத் துறைகள் குறிப்பாக சென்னை பெருநகர குடிநீர் வாரியமும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும் எடுத்து வருகின்றன. இந்த நடவடிக்கைகள் குறித்து முதல்வருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்த வேண்டுமென அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை கண்காணிப்புடனும், உன்னிப்பாகவும் திறம்பட செயல்படுத்த வேண்டுமெனக் கூறியுள்ளார். பெரிய அளவிலான புதிய திட்டங்கள் ஏதும் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. 
குடிநீர்த் தட்டுப்பாட்டின் அளவு மேலும் அதிகரிக்கும் போது மீண்டும் ஆலோசிக்கப்பட்டு தேவை ஏற்படின் புதிய திட்டங்கள் வகுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com