மக்கள்தொகையை கட்டுப்படுத்துவது தொடர்பான மனு: மத்திய அரசு பதிலளிக்க தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

மக்கள்தொகையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு குறித்து மத்திய அரசு பதிலளிக்குமாறு
மக்கள்தொகையை கட்டுப்படுத்துவது தொடர்பான மனு: மத்திய அரசு பதிலளிக்க தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு


மக்கள்தொகையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு குறித்து மத்திய அரசு பதிலளிக்குமாறு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் மக்கள்தொகை அதிகரித்து வருவதால், வேலையின்மை பிரச்னை, வளங்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனால் மக்கள்தொகையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்குரைஞரும், பாஜக நிர்வாகியுமான அஸ்வினி குமார் உபாத்யாய தில்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் மற்றும் நீதிபதி பிரிஜேஷ் சேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதற்கான சட்டத்தை  உடனடியாக அரசு நிறைவேற்றுமாறு உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் வலியுறுத்தினார்.
அதைக் கேட்ட நீதிபதிகள், இந்த மனு குறித்து பதிலளிக்குமாறு உள்துறை அமைச்சகத்துக்கும், சட்ட ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். 
அதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை செப்டம்பர் 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அஸ்வினி தாக்கல் செய்த பொது நல மனுவில், அரசமைப்புச் சட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த தேசிய ஆணையம், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல பரிந்துரைகளை அளித்தது. 
சுமார் 2 ஆண்டுகள் ஆய்வு செய்து மக்கள்தொகை கட்டுப்பாட்டுக்கான சட்டத்தை அந்த ஆணையம் பரிந்துரைந்தது. அதை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அரசமைப்புச் சட்டத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட முறை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் நாட்டுக்கு மிகவும் தேவையான மக்கள்தொகை கட்டுப்பாடு சட்டம் நிறைவேற்றப்படவில்லை. அந்த சட்டத்தை கொண்டு வந்தாலே நாட்டின் 50 சதவீத பிரச்னைகள் குறைந்து விடும்.
அரசு வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள், மானியம், அரசு உதவி பெற விரும்புபவர்களுக்கு இரு குழந்தைகளுக்கு மேல் இருக்க கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதிக்கலாம். மக்கள்தொகை அதிக அளவில் இருப்பதே, ஊழலுக்கு முதல் காரணம் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com