வருமானத்துக்கு பொருந்தாத சொத்து: ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி மீது வழக்கு: சிபிஐ நடவடிக்கை

வருமானத்துக்கு பொருந்தாத வகையில்  சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், ஓய்வு பெற்ற மத்திய அரசு உயர் அதிகாரி மீது சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர். 


வருமானத்துக்கு பொருந்தாத வகையில்  சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், ஓய்வு பெற்ற மத்திய அரசு உயர் அதிகாரி மீது சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர். 
இது குறித்து சிபிஐ தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிப் பொருள் பாதுகாப்புத்துறை அலுவலகம் செயல்படுகிறது. இந்தத் துறையின் மூலம் பெட்ரோல் பங்க், சிலிண்டர் கிடங்கு,பெட்ரோலியப் பொருள்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு தடையில்லா சான்றிதழ்  மற்றும் உரிமங்கள் வழங்கப்படுகின்றன.
இந்த அலுவலகத்தின் இணை தலைமை வெடிப் பொருள் கட்டுப்பாட்டு அதிகாரியாக அசோக்குமார் யாதவ் என்பவர் கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி வரை பணிபுரிந்தார். அதன் பின்னர் அசோக்குமார் ஓய்வு பெற்றுவிட்டார்.
இந்த நிலையில் அசோக்குமார் பணியில் இருந்த காலகட்டத்தில் பெருமளவு லஞ்சம் வாங்கியதாகவும், ஊழல் செய்ததாகவும் பல்வேறு புகார்கள் சென்னை சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவுக்கு வந்தன. அதன் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், அசோக்குமார் வருமானத்துக்கு பொருந்தாத வகையில்  சொத்து சேர்த்திருப்பதும், தான் வாங்கிய சொத்துகளை தனது வீட்டில் வேலை செய்யும் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயில் பகுதியைச் சேர்ந்த பா.சரிதா என்பவர் பெயரில் வைத்திருப்பதும், அவருக்கு சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்த க.குமரேசன் என்பவர் தரகராக செயல்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள், அசோக்குமார், சரிதா, குமரேசன் ஆகியோர் மீது வருமானத்துக்கு பொருந்தாத வகையில்  சொத்து சேர்த்ததாக புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். 
இது தொடர்பாக அவர்கள் நடத்திய விசாரணையில் அசோக்குமார்,  வருமானத்தை காட்டிலும் 311 சதவீதம் அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பது கண்டறியப்பட்டது. 
இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த வழக்குத் தொடர்பாக அசோக்குமார் உள்ளிட்ட 3 பேரிடம் விரைவில் 
விசாரணை நடத்த உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com