சுடச்சுட

  
  robert-vadera


  பிரிட்டன் தலைநகர் லண்டனில் சொத்துகள் வாங்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா வியாழக்கிழமை ஆஜரானார்.
  லண்டனில் பல கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகள் வாங்கியது தொடர்பாக ராபர்ட் வதேரா, அவரது உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோருக்கு எதிராக  சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்குத் தொடர்பான விசாரணையில் வியாழக்கிழமை ஆஜராகுமாறு, ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது.
  இதையேற்று, தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜரானார். அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேராவை அவரது மனைவியும், சோனியா காந்தியின் மகளுமான பிரியங்கா காரில் நேரில் வந்து விட்டுச் சென்றார்.
  அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகும் முன்பு சுட்டுரையில் ராபர்ட் வதேரா சில பதிவுகளை வெளியிட்டார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது:
  இந்திய நீதித்துறை மீது எனக்கு தொடர்ந்து நம்பிக்கை உள்ளது. அதனால் அனைத்து விசாரணை அமைப்புகள் அனுப்பும் சம்மன்களுக்கும் மதிப்பளிப்பேன். ஏற்கெனவே 11 முறை நேரில் ஆஜராகியுள்ளேன். என்னிடம் சுமார் 70 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
  எதிர்காலத்திலும் எனது ஒத்துழைப்பை அளிப்பேன். என்மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று நிரூபிக்கப்படும்வரை, எனது ஒத்துழைப்பை வழங்குவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
  முன்னதாக, இந்த வழக்கில் ராபர்ட் வதேரா, அரோரா ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முன்ஜாமீன் அளித்தது. இதை எதிர்த்து  தில்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கடந்த வாரம் மனு தாக்கல் செய்தது.
  இந்த மனு, தில்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரும் அமலாக்கத் துறை மனு குறித்து பதிலளிக்க ராபர்ட் வதேரா, அரோரா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் பிரிட்டன் உள்ளிட்ட 3 நாடுகளில் சுற்றுப்பயணம் செல்ல அனுமதிகோரி, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ராபர்ட் வதேரா மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான உத்தரவை ஜுன் 3ஆம் தேதிக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai