சுடச்சுட

  

  கார்கில் வீரருக்கு வெளிநாட்டவர் முத்திரை: அஸ்ஸாம் பாஜக அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்

  By DIN  |   Published on : 31st May 2019 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  கார்கில் போர் வீரரை வெளிநாட்டவர் என்று அஸ்ஸாமில் உள்ள தீர்ப்பாயம் ஒன்று அறிவித்திருப்பதற்கு அந்த மாநில பாஜக அரசுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
  இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தனது சுட்டுரைப் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
  கார்கில் போர் வீரருக்கு வெளிநாட்டவர் என பாஜக அரசு முத்திரை குத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது, ராணுவத்தில் போர் புரியும் நமது வீரர்களின் தியாகத்தை அவமதிக்கும் செயல். இதிலிருந்து அரசின் குறைபாடுகளும், அடக்குமுறைகளும் தெரியவருகின்றன. இதேபோக்கில், அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடும் தயாரிப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
  அஸ்ஸாம் மாநிலம், காமரூப் மாவட்டத்தில் உள்ள கோலோஹிகாஷ் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது சனாவுல்லா. இவர் கார்கில் போரில் பங்கேற்றுள்ளார்.
  ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவருக்கு அஸ்ஸாமில் உள்ள வெளிநாட்டினருக்கான தீர்ப்பாயம் வழக்கு ஒன்றுக்காக, கடந்த ஆண்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.  அவர் 4-5 முறை விசாரணைக்காக தீர்ப்பாயம் முன்பாக ஆஜராகியிருந்தார். ஒரு விசாரணையின்போது, ராணுவத்தில் தான் பணிக்குச் சேர்ந்த ஆண்டை 1987 என்று தெரிவிப்பதற்குப் பதிலாக, 1978 என்று தெரிவித்தார். இந்த தகவலின் அடிப்படையில் ஆவணங்களை ஆய்வு செய்த தீர்ப்பாயம், அவரை வெளிநாட்டவர் என்று முத்திரை குத்தியுள்ளது. இதனிடையே, தீர்ப்பாயத்தின் இந்த முடிவை எதிர்த்து, குவாஹாட்டி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்ய இருப்பதாக, சனாவுல்லாவின் குடும்பத்தினர் தெரிவித்தனர். 
  அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள்பதிவேடு (என்ஆர்சி) தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வரும் அந்த மாநில அரசு, கடந்த ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி வரைவு பட்டியலை வெளியிட்டது. அதில், மொத்தமுள்ள 3.29 கோடிப் பேரில் 2.89 கோடிப் பேரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. எஞ்சியுள்ள 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளன. இவற்றில், 37,59,630 பேரின் பெயர்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன.  2,48,077 பேரின் பெயர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், என்ஆர்சி இறுதிப் பட்டியல் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai