சுடச்சுட

    

    சாரதா நிதி நிறுவன மோசடி: ராஜீவ் குமாரை கைது செய்ய ஒரு மாதம் தடை

    By DIN  |   Published on : 31st May 2019 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையரும், மாநில சிஐடி கூடுதல் தலைமை இயக்குநருமான ராஜீவ் குமாரைக் கைது செய்வதற்கு ஒரு மாதம் விலக்கு அளித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    அதாவது, ஜூன் 10-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை முடிந்து, உயர்நீதிமன்றம் மீண்டும் திறக்கப்படும் வரை, அவரைக் கைது செய்வதில் இருந்து பாதுகாப்பு அளித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ விசாரணைக்கு ராஜீவ் குமார் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்;  அவர் தினமும் மாலை 4 மணிக்கு விசாரணை அதிகாரி முன் ஆஜராகி தனது வருகையைப் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி பிரதிக் பிரகாஷ் பானர்ஜி வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரித்து வந்த ராஜீவ் குமார் முக்கிய ஆவணங்களையும், தடயங்களையும் அழித்து விட்டதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
    இதுதொடர்பாக, அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் சென்றபோது, அவர்களை மேற்கு வங்க காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதுடன், விசாரணை நடத்த அனுமதி மறுத்துவிட்டனர்.  இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ முறையிட்டது. இதையடுத்து, ராஜீவ் குமார் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், அதே சமயம், அவரைக் கைது செய்வதற்கு சிபிஐக்கு இடைக்காலத் தடை விதித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த சில தினங்களில், அந்த தடையை உச்சநீதிமன்றம் விலக்கிக் கொண்டது.
    இதையடுத்து, இந்த வழக்கில் சிபிஐ கைது செய்வதில் இருந்து தன்னைப் பாதுகாக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் ராஜீவ் குமார் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவர் முறையிடலாம் என்று தெரிவித்தது. இதையடுத்து, அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தை அவர் நாடினார்.  இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அவரை சிபிஐ கைது செய்வதில் இருந்து ஒரு மாதம் தடை விதித்து உத்தரவிட்டது.
    மக்களவைத் தேர்தலுக்கு முன், ராஜீவ் குமாருக்கு சிஐடி கூடுதல் இயக்குநர் பொறுப்பை மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு வழங்கியது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு அந்த பணி உத்தரவு ரத்து செய்யப்பட்டது.  தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததை அடுத்து, அவருக்கு மீண்டும் சிஐடி கூடுதல் தலைமை இயக்குநர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai