சுடச்சுட

  
  modi1

  நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.


  நாட்டின் 16-ஆவது பிரதமராக நரேந்திர மோடி (68) வியாழக்கிழமை பதவியேற்றார். தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இதன் மூலம் மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பிரதமர் பதவியேற்றுள்ளார். பிரதமரைத் தொடர்ந்து 57 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
  இரவு 7 மணிக்கு தேசிய கீதத்துடன் பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் பிரதமர் மோடி பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, சதானந்த கெளடா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 57 அமைச்சர்களும் பதவியேற்றனர். உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் மற்றும் பல்துறை பிரமுகர்கள் முன்னிலையில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
  இதற்கு முன்பு எந்தவொரு பிரதமரின் பதவியேற்பு நிகழ்ச்சியிலும் இல்லாத அளவுக்கு இந்த நிகழ்ச்சியில் 8,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பதவியேற்புக்காக குடியரசுத் தலைவர் மாளிகையின் வெளிமுற்றத்தில் சிறப்பு மேடை அமைக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், அமித் ஷா, கட்கரி, ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் ஹிந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். சதானந்த கெளடா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் ஆங்கிலத்தில் பதவிப் பிரமாணம் எடுத்தனர். முதலில் கேபினட் அமைச்சர்களும், அடுத்து தனிப் பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்களும்,  அதைத் தொடர்ந்து இணையமைச்சர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இரவு 7 மணிக்கு தொடங்கிய பதவியேற்பு நிகழ்ச்சி 9 மணியளவில் நிறைவடைந்தது. 
  24 கேபினட் அமைச்சர்கள்: மத்திய அமைச்சரவையில் பிரதமர் மோடி, 24 கேபினட் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். 9 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்களாகவும், 24 பேர் இணையமைச்சர்களாகவும் பதவியேற்றனர். 
  புதிய அமைச்சரவையில் 6 பெண்களும் இடம் பெற்றுள்ளனர். மத்திய அமைச்சரவையில் மொத்தம் 80 அமைச்சர்கள் இடம் பெற முடியும். மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையில் 15 சதவீதம் பேர் அமைச்சராகலாம் என்பது விதியாகும். எனினும், இப்போது மோடியுடன் சேர்த்து 58 பேர் அமைச்சரவையில் உள்ளனர்.
  அமித் ஷாவுக்கு அமைச்சர் பதவி: பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, கேபினட் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். அவர் இப்போதுதான் முதல்முறையாக மத்திய அமைச்சராகியுள்ளார். இதற்கு முன்பு குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது மாநில அமைச்சராக அமித் ஷா பதவி வகித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றியில் அமித் ஷாவின் பங்கு முக்கியமானது. எனவே, அவருக்கு கூடுதல் கெளரவம் அளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
  கேபினட் அமைச்சரானார் ஜெய்சங்கர்: முன்னாள் வெளியுறவுத் துறை செயலர் எஸ்.ஜெய்சங்கர் கேபினட் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். 
  தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட ஜெய்சங்கர் ஐஎப்எஸ் அதிகாரியாவார். 2015 முதல் 2018 வரை மத்திய வெளியுறவுச் செயலராகப் பணியாற்றியுள்ளார். அமெரிக்கா, சீனா, செக் குடியரசு நாடுகளில் இந்தியத் தூதராகவும் இருந்துள்ளார். இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் முக்கியப் பங்கு வகித்தார். ஜெய் சங்கரின் தந்தை சுப்பிரமணியம் ஐஏஎஸ் அதிகாரியாவார். அவரது சொந்த ஊர் திருச்சி.


  கூட்டணிக் கட்சிகளுக்கு...: பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள லோக் ஜன சக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் கேபினட் அமைச்சராகப் பதவியேற்றார். சிரோமணி அகாலி தளம் சார்பில் ஹர்சிம்ரத் கெளர், சிவசேனை சார்பில் அரவிந்த் சாவந்த் ஆகியோர் கேபினட் அமைச்சராகியுள்ளனர். இந்தியக் குடியரசுக் கட்சியின் (ஏ) தலைவர் ராம்தாஸ் அதாவலே இணையமைச்சராகியுள்ளார். 
  ஐக்கிய ஜனதா தளம், அதிமுக ஆகிய கூட்டணிக் கட்சிகளில் இருந்து யாரும் அமைச்சராகவில்லை.
  இடம் பெறாத அமைச்சர்கள்: கடந்த அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முக்கிய அமைச்சர்களான அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர், மேனகா காந்தி, ஜெயந்த் சின்ஹா ஆகியோர் இப்போது இடம்பெறவில்லை. நிதியமைச்சராக இருந்த அருண் ஜேட்லி, உடல்நலக் குறைவு காரணமாக தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று அறிவித்துவிட்டார். வெளியுறவு அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ்,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர், மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி ஆகியோர் மீண்டும் அமைச்சரவையில் இடம் பெறாதது குறித்த தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.  மேனகா காந்தி மக்களவையின் இடைக்காலத் தலைவராக செயல்படுவார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
  பங்கேற்ற தலைவர்கள், பிரபலங்கள்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, பல்வேறு மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, கெளதம் அதானி, எல்.என். மிட்டல், திரைத்துறை பிரபலங்கள், வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பில் உள்ள (பிம்ஸ்டெக்) தாய்லாந்து சார்பில் சிறப்புத் தூதர் கிரிசாடா பூன்ராச், மியான்மர் அதிபர் யூ வின் மையின்ட், கிர்கிஸ்தான் அதிபர் ஜீன்பிக்கோவ், பூடான் பிரதமர் லோட்டே ஸ்ரிங், வங்கதேச அதிபர் அப்துல் ஹமீது, இலங்கை அதிபர் சிறீசேனா, நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி ஆகியோர் பங்கேற்றனர். இது தவிர, மோரீஷஸ் பிரதமர் பிரவிந்த் குமாரும், வெளிநாட்டுத் தூதர்களும், முக்கிய பிரமுகர்களும் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
  தமிழகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
  தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் மாளிகை வெளிமுற்றத்தில் பதவியேற்றுக் கொள்கிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மோடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் 3,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  

  சுட்டுரையில் மோடி பெருமிதம்
  இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவியேற்ற பிறகு சுட்டுரையில் (டுவிட்டர்) மோடி வெளியிட்டுள்ள முதல் பதிவில், நாட்டுக்கு சேவையாற்றுவதில் பெருமிதம் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

  20 புதிய அமைச்சர்கள்
  மத்திய அமைச்சரவையில் 20 புதிய அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் இப்போதுதான் முதல்முறையாக மத்திய அமைச்சர்களாகியுள்ளனர். அதே நேரத்தில் கடந்த அமைச்சரவையில் இருந்தவர்களில் 36 பேர் மீண்டும் அமைச்சர்களாகத் தொடர்கின்றனர். வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பிரகலாத் சிங் படேல் இப்போதைய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.

  உத்தரப் பிரதேசத்தில் இருந்து 10 அமைச்சர்கள்
  மாநில வாரியாகப் பார்க்கும்போது உத்தரப் பிரதேசத்தில் இருந்து அதிகபட்சமாக 10 பேர் மத்திய அமைச்சர்களாகியுள்ளனர். இதிலும் கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் இருந்து மக்களவைக்கு தேர்வானவர்கள் அதிக அளவில் அமைச்சரவையில் உள்ளனர்.
  பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, முக்தார் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோர் உத்தரப் பிரதேசத்தில் இருந்து அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்களில் முக்கியமானவர்கள். உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் மகேந்திர நாத் பாண்டே தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சராகியுள்ளார்.

  தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், பதவிப் பிரமாணம் செய்துவைத்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள்.
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai