ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் பதவியேற்பு: மோடி, ராகுல் வாழ்த்து

ஆந்திர முதல்வராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வியாழக்கிழமை பதவியேற்றார். அவருக்கு பிரதமர் நரேந்திர  மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தங்களது
விஜயவாடாவில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் ஆந்திர முதல்வராக பதவியேற்ற ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி. அருகில் ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன்.
விஜயவாடாவில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் ஆந்திர முதல்வராக பதவியேற்ற ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி. அருகில் ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன்.


ஆந்திர முதல்வராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வியாழக்கிழமை பதவியேற்றார். அவருக்கு பிரதமர் நரேந்திர  மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் 151 தொகுதிகளில் வென்று, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து சட்டப்பேரவைக்கான அக்கட்சியின் எம்எல்ஏக்கள் குழுத் தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார். இதன்பின்னர் மாநில ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மனை சந்தித்து  ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதையேற்று, ஜெகன்மோகன் ரெட்டியை ஆட்சியமைக்கும்படி ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
இதன்படி, விஜயவாடாவில் உள்ள ஐ.ஜி.எம்.சி. மைதானத்தில் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக பதவியேற்கும் விழா வியாழக்கிழமை மதியம் 12.23 மணிக்கு நடைபெற்றது. இதில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். தெலுங்கில் ஜெகன்மோகன் ரெட்டி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. ஜூன் 7ஆம் தேதி அமைச்சர்கள் பதவியேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதியோருக்கான ஓய்வூதியத் தொகை அதிகரிப்பு: முதல்வராக பதவியேற்றதும், வறுமையில் வாழும் முதியோருக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத் தொகை ரூ.1,000ஐ, ரூ.3,000ஆக அதிகரிப்பது தொடர்பான கோப்பில் தமது முதல் கையெழுத்தை ஜெகன்மோகன் ரெட்டி பதிவு செய்தார். கிராம ஊராட்சிகளில் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் 4 லட்சம் படித்த இளைஞர்களை மாதம் ரூ.5,000 ஊதியத்தில் பணியில் அமர்த்தவும் உத்தரவிட்டார்.
விழாவில் அவர் பேசுகையில், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12,500 உதவித் தொகை அளிக்கப்படும். மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும். நோயாளிகளின் சிகிச்சைக்கு ரூ.10,000 அளிக்கப்படும் ஆரோக்கியஸ்ரீ திட்டமும் செயல்படுத்தப்படும். முந்தைய அரசால் அளிக்கப்பட்ட ஒப்பந்தங்களில் ஊழல் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும். ஊழல் தொடர்பான புகாரை தெரிவிக்க முதல்வர் அலுவலகத்தில் பிரத்யேக தொலைபேசி எண் சுதந்திர தினத்தன்று தொடங்கப்படும் என்றார்.
பதவியேற்பு விழாவில் தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், தெலங்கானா துணை முதல்வர் முகமது அலி, சட்டப்பேரவைத் தலைவர் ஸ்ரீநிவாச ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜெகன்மோகன் ரெட்டியின் தாயார் விஜயாம்மா, ஜெகன்மோகன் ரெட்டி மனைவி பாரதி, சகோதரி ஷர்மிளா மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள், பிரபல திரைப்பட இயக்குநர் ராம்கோபால் வர்மா உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரும் விழாவில் பங்கேற்றனர்.
தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை.
ஆந்திர முதல்வராக பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com