கங்கை நீர் குடிநீராக பயன்படாது: மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்

கங்கை நதி நீரை குடிநீராகவோ, குளிக்கவோ பயன்படுத்த இயலாது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.


கங்கை நதி நீரை குடிநீராகவோ, குளிக்கவோ பயன்படுத்த இயலாது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
புண்ணிய நதிகளில் ஒன்றாக கருதப்படும் கங்கையில் நீராட ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், கங்கை நதி மிக மோசமாக மாசுபாடு அடைந்துள்ளதாகவும், அதை நேரடியாக குடிக்கவோ, குளிக்கவோ பயன்படுத்த முடியாது என்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கங்கை நதி பாயும் வழியில் 86 இடங்களில் கண்காணிப்பு மையம் அமைத்திருந்தோம். அந்த இடங்களில் உள்ள நீரை பரிசோதனை செய்ததில் 78 இடங்களில் உள்ள நீர் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 
கங்கை நதி முழுவதும் வீரியம் மிகுந்த பாக்டீரியாக்கள் உள்ளன. அதனால் கங்கை நதியை குடிக்க, குளிக்க பயன்படுத்த இயலாது. மேற்கு வங்கத்தில் 2 இடங்கள் மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தின் சில இடங்களில் நீரை சுத்தம் செய்துவிட்டு பருகலாம்.
86 இடங்களில் வெறும் 18 இடங்களில் மட்டும் குளிப்பதற்கு ஏற்ற சூழல் உள்ளது. அவற்றில் கங்கோத்ரி, ருத்ரபிரயாக், ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களில் உள்ள நீரில் குளிக்கலாம். வாராணசியின் கோலா காட், கான்பூர், பக்ஸார், பாட்னா, மேற்கு வங்கத்தின் ஹெளரா, சிவபுரி உள்ளிட்ட இடங்கள் வழியாக செல்லும் நதி நீர் எதற்கும் பயன்படாத நிலையில் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சக செயலர் சி.கே. கூறுகையில்,  கங்கை தூய்மைப்படுத்துதல் திட்டத்தின் கீழ் நதி சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.
நதியில் 30 சதவீத தொழிற்சாலை கழிவுகள் கலந்தன. 70 சதவீதம்  கழிவுநீர் கலக்கிறது. தற்போது தொழிற்சாலைக் கழிவுகள் நதியில் கலப்பதை நிறுத்தியுள்ளோம். கழிவுநீர் கலப்பு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. கங்கையின் நிலையை நினைத்து அனைவரும் வருத்தப்படுவார்கள் என்பதை நன்கறிவோம். 
கழிவுநீர் கலப்பை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள்  தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com