கர்நாடகத்தில் எளிதாக வாய்த்ததல்ல பாஜகவின் வெற்றி!

காங்கிரஸ், ஜனதா தளம் கட்சி ஆதிக்கம் செலுத்தி வந்த கர்நாடக அரசியல் களத்தில், மக்களவை தேர்தல் மூலம் பாஜக அடைந்துள்ள வெற்றி எளிதில் வாய்த்ததல்ல.
கர்நாடகத்தில் எளிதாக வாய்த்ததல்ல பாஜகவின் வெற்றி!

காங்கிரஸ், ஜனதா தளம் கட்சி ஆதிக்கம் செலுத்தி வந்த கர்நாடக அரசியல் களத்தில், மக்களவை தேர்தல் மூலம் பாஜக அடைந்துள்ள வெற்றி எளிதில் வாய்த்ததல்ல. 1980-இல் பாரதிய ஜனதா கட்சி(பாஜக) தொடங்கப்படுவதற்கு முன்பதிப்பாக விளங்கிய பாரதிய ஜன சங்கம், அதன் தொடக்க காலத்தில் இருந்தே கர்நாடகத்தில் சுவடு பதித்து வந்திருந்தது. தென் கன்னடம், உடுப்பி, ஹுப்பள்ளி, வட கன்னடம் போன்ற மாவட்டங்களில் அதிகளவில் வாழும் பிராமண சமூகத்தின் ஆதரவில் அப் பகுதிகளில் பாரதிய ஜனசங்கம் பிரபலமாக இருந்து வந்தது. ஒருசில சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல்களிலும் வெற்றிகளைக் குவித்து வந்தது.
 1983-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிர்பாரா விதமாக 18 இடங்கள் கிடைத்தன. அறுதிப்பெரும்பான்மை இல்லாமல் தவித்த அப்போதைய ஜனதா கட்சிக்கு பாஜக வெளியில் இருந்து ஆதரவு அளித்தது. அதன்பிறகு 1985, 1989-ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக, முறையே 4 மற்றும் 2 இடங்களில் மட்டுமே வென்றது. அடுத்த 10 ஆண்டுகள் பாஜகவுக்கு சாதகமானவையாக அமைந்தன. 1994-இல் 40 இடங்களுடன், 1999-இல் 44 இடங்களுடன் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக பாஜக செயல்பட்டது. அதே காலக்கட்டத்தில் தேசிய அளவில் குறிப்பாக வட இந்தியாவில் பாஜக வேகமாக வளரத் தொடங்கியது. 1998, 1999-இல் மத்தியில் அடல் பிகாரிவாஜ்பாய் தலைமையில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு அமைந்தது.
 ராமஜென்ம பூமி பிரச்னை, வாஜ்பாயின் ஆதரவு அலை இருந்தபோது 1998-இல் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வெறும் 6 இடங்கள்மட்டுமே கிடைத்தன. இது படிப்படியாக உயர்ந்து, தற்போது மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் 25 இடங்களை பாஜக பிடித்து சாதனை படைத்துள்ளது. பாஜக இன்றைக்கு பெற்றிருக்கும் இந்த மாபெரும் வெற்றி, காங்கிரஸ், ஜனதாதளத்தின் வீழ்ச்சியால் விளைந்தது. குறிப்பாக, ஜனதாதளம் அரசியல் காலச்சுவட்டில் காணாமல் போனபோது, அந்த இடத்தை சரியாக இட்டு நிரப்பியதால், பாஜக மகத்தான இடத்தைப் பிடித்துள்ளது. கர்நாடகத்தில் காங்கிரசுக்கு மாற்றாக ஜனதாதளத்தை விட்டால் வேறு கட்சி இல்லை எனற நிலையில், மூன்றாவது இடத்தில் பாஜக இருந்து வந்தது. 1990-களில் ஜனதாதளம் பலகூறுகளாகப் பிரிந்து சிதறிப்போனபோது, காங்கிரசுக்கு மாற்றாக பாஜக வளரத் தொடங்கியது. 1990-களுக்குப் பிறகு சட்டப்பேரவை அல்லது மக்களவை என எந்தத் தேர்தலாக இருந்தாலும் காங்கிரசுக்கு போட்டி பாஜக என்ற நிலை உருவானது.
 ஜனதா தளத்தின் சார்பற்ற நிலைக்கு மாற்றாக வலதுசாரி ஹிந்துத்துவா கொள்கையை கர்நாடகத்தில் விதைப்பது பாஜகவுக்கு பெரும் சவாலாக அமைந்தது. அந்த சவாலை எதிர்கொள்ள அரசியல் ரீதியாக சில சமரசங்களைச் செய்துகொள்ள பாஜக தயாரானது. அரசியல்ரீதியாக மட்டுமல்லாது, சமூக, கலாசார ரீதியான சில வியூகங்களை வகுக்க நேர்ந்தது. ஹிந்துத்துவா கொள்கையில் பற்றில்லாதவர்களையும், அரசியல் லாபத்தை நோக்கமாக கொண்டவர்களையும் தன்னுடன் பாஜக இணைத்துக் கொண்டது. இந்த மாற்றம், பாஜகவுக்கு அரசியல்ரீதியான பலனை அளிக்கத் தொடங்கியது. ஆனாலும், பாஜக தனது உண்மைத்தன்மையை இழந்துவிட்டது. தற்போது பாஜகவில் பெருந்தலைவர்களாக ஒளி வெள்ளத்தில் மின்னுபவர்களில் பெரும்பாலானோர் ஜனதா கட்சி, ஜனதாதளம், மஜத, காங்கிரசில் இருந்து வந்தவர்களாவர். இவர்களைத் தவிர, ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள், தொழிலதிபர்கள் பலரும் பாஜகவில் ஐக்கியமாகி இருக்கிறார்கள்.
 அடிப்படையில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த பி.எஸ்.எடியூரப்பா, கே.எஸ்.ஈஸ்வரப்பா, எச்.என்.அனந்த்குமார், பி.பி.சிவப்பா போன்ற தலைவர்கள் அல்லும்பகலும் உழைத்ததால் பாஜக உச்சத்தைத் தொட்டுள்ளது. கர்நாடகத்தில் பாஜகவை வளர்க்க கட்சியின் மூத்தத் தலைவர்கள் சில அரசியல் வியூகங்களை வகுத்தனர். அதில் முக்கியமானது, கல்வி நிலையங்களில் கோலோச்சிய காங்கிரஸ் கட்சியின் இந்திய தேசிய மாணவர் ஒன்றியத்தை பலவீனப்படுத்துவதாகும். இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. எல்லா கல்விக்கூடங்களிலும் பாஜக ஆதரவு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்(அகில இந்திய மாணவர் பேரவை)தொடங்கப்பட்டு, மாணவர்களின் நலன்சார்ந்த பிரச்னைகளை கையில் எடுத்து போராட்டம் நடத்தியது. 1990-களில் தொழில் கல்லூரிகளில் மனம்போன போக்கில் கல்விக்கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதை கண்டித்து அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தீவிர போராட்டம் நடத்தியதன் விளைவாக, கல்விக்கட்டணம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இது மாணவர்கள், பெற்றோர்களிடையே அந்த அமைப்புக்கு நல்லெண்ணத்தை ஏற்படுத்தியது. அந்த அமைப்பில் இருந்து பின்னர் பாஜகவில் பெரிய தலைவர்களாக உருவெடுத்தவர்கள் தான் ஷோபா கரந்தலஜே, அரவிந்த்லிம்பாவளி, அனந்த்குமார் போன்றோர்.
 இதன் தொடர்ச்சியாக, வாக்காளர்களை ஒருங்கிணைக்கும் வேலையில் பாஜக இறங்கியது. அதற்காக சிக்கமகளூருவில் பாபாபுடன்கிரி கோயில், ஹுப்பள்ளியில் ஈத்கா மைதான பிரச்னைகளை கையில் எடுத்தது. இந்த விவகாரங்களால் ஹிந்து வாக்குகள் ஒருமுகப்படுத்தப்பட்டன. ஆனால், கடலோர, மலைநாடு மாவட்டங்களைத் தவிர, மாநிலம் முழுவதும் இதன் தாக்கம் உணரப்படவில்லை.
 1990-இல் காங்கிரஸ் அரசின் முதல்வராகப் பதவிவகித்த வீரேந்திர பாட்டீலை அப்போதைய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜீவ் காந்தி, யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென மாற்றி, வீரப்ப மொய்லியை முதல்வராக்கினார். இதனால் வேதனை அடைந்த வீரேந்திர பாட்டீலின் கர்நாடகத்தின் பெரும்பான்மை சமூகமான லிங்காயத்துகள், காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து ஜனதாதள ஆதரவுக்கு மாறியிருந்தனர்.
 1999-இல் கர்நாடகத்தில் ஜனதா தளம் ஆட்சியை இழந்தபோது, அக் கட்சியை சேர்ந்த லிங்காயத்து தலைவர்கள், தொண்டர்கள் அக் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இது மாநில அளவில் கட்சியைப் பலப்படுத்த பெரிதும் உதவியது. இதன் விளைவாக, 2004-இல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 79 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தலா 20 மாதங்கள் ஆட்சி புரியும் ஒப்பந்தத்துடன் 2006-இல் மஜதவின் எச்.டி.குமாரசாமி முதல்வராக, பாஜகவின் எடியூரப்பா துணைமுதல்வராக உருவான மஜத-பாஜக கூட்டணி அரசில் பாஜக அங்கம் வகித்தது. இருகட்சிகளும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி பாஜகவுக்கு ஆட்சி மாற்றம் செய்யப்படாததால், 2007-இல் ஆட்சி கவிழ்ந்தது. இது கர்நாடகத்தில்பாஜகவுக்கு ஆதரவான அலையானது. இது பாஜகவின் வளர்ச்சியில் திருப்புமுனையாக அமைந்தது. 2008-இல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 110 இடங்களில் பாஜக வென்றது. அறுதிப்பெரும்பான்மைக்கு 3 இடங்கள் குறைவாக இருந்தநிலையில், சுயேச்சைகளின் ஆதரவில் எடியூரப்பா தலைமையில் தென்னிந்தியாவில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமைந்தது.
 இதனிடையே, மத்திய கர்நாடகத்தின் வலதுசாரி தலித்துகள், பழங்குடியினர், கடலோர கர்நாடகத்தின் பிலவாக்கள், பன்ட்கள், மாநிலம் முழுவதும் பிற்படுத்தப்பட்டோரின் ஆதரவைப் பெருக்குவதில் பாஜக வெற்றிபெற்றிருந்தது. 2008-இல் கர்நாடகத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய பாஜக, பிரதமர் மோடி காலத்திற்கு முன்பாக 2009-இல் நடந்த மக்களவைத் தேர்தலில் அதிகபட்சமாக 19 இடங்களில் வென்றிருந்தது. 2013-இல் சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை பலத்தைப் பெறாவிட்டாலும், 2014-இன் மக்களவை தேர்தலில் பாஜக 17 இடங்களைக் கைப்பற்றி கர்நாடகத்தில் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியிருந்தது. இதன் தொடர்ச்சியாக, 2018-இல் நடந்த சட்டப்பேரவைதேர்தலில் பாஜக 104 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், அறுதிப்பெரும்பான்மைக்கு 9 இடங்கள் குறையாக இருந்ததால் பாஜக அமைத்த ஆட்சி 2 நாட்களில் சரிந்தது. இதையடுத்து, மஜதவும் காங்கிரசும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. சம்பந்தப்பட்ட இரு கட்சித் தொண்டர்களால், பொதுமக்களால் விரும்பப்படாத இக் கூட்டணி அரசு மீது மக்கள் அதிருப்தி அடைந்தனர். இது பாஜகவுக்கு அரசியல் வரமாக வாய்த்தது. அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 28 இடங்களில் 25 தொகுதிகளில் பாஜக வென்றது. இத்தேர்தலில் வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு தலா ஓர் இடம் மட்டும் மஜதவுக்கும் காங்கிரசுக்கும் கிடைத்தது.
 காங்கிரசுடனான மஜத கூட்டணியை விரும்பாத அக் கட்சிக்கு ஆதரவளித்துவரும் ஒக்கலிகர் சமுதாயத்தினர், இம்முறை பாஜகவுக்கு முழுமையாக வாக்களித்துள்ளனர். வட கர்நாடகத்தை சேர்ந்த லிங்காயத்து சமுதாயத்தினர் வழக்கம்போல எடியூரப்பா சார்ந்திருக்கும் பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளனர். இதன்காரணமாக, மக்களவைத் தேர்தலில் 25 இடங்களை வென்றதோடு, ஒருகாலத்தில் வட கர்நாடகத்தின் கட்சி என்று அழைக்கப்பட்ட பாஜக, மாநிலக் கட்சியாக முழுமையாக முகிழ்ந்துள்ளது. மக்களவை தேர்தல்களில் 1991-இல் 4 தொகுதிகளிலும், 1996-இல் 6 இடங்களிலும், 1998-இல் 13 தொகுதிகளிலும், 1999-இல் 7 இடங்களிலும், 2004-இல் 18 தொகுதிகளிலும், 2009-இல் 19 இடங்களிலும், 2014-இல் 17 தொகுதிகளிலும், 2019-இல் 25 இடங்களிலும் வென்று இமாலய வளர்ச்சியை கண்டுள்ளது பா.ஜ.க. அடுத்த தேர்தலில் எத்தனை தொகுதிகளை கைப்பற்றும் என்பதை தற்போது கணிக்கமுடியாது என்றாலும், காங்கிரஸ், மஜத கட்சிகளை கலங்கவைக்கும் அளவுக்கு கர்நாடகத்தின் மலைக்கத்தக்க அரசியல் சக்தியாக பாஜக பூதாகரமாக உயர்ந்துள்ளது. பாஜகவின் வெற்றி, குறைந்தப்பட்சம் அடுத்த 20 ஆண்டுகளுக்காவது அசைக்கமுடியாத சக்தியாக விளங்கும் என்பதுஅரசியல் நோக்கர்களின் கருத்தாகும்.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com