காஷ்மீர் பிரச்னைக்கு அமைதி தீர்வு காண இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்: பாகிஸ்தான் தகவல்

காஷ்மீர் விவகாரத்தில் விரைவில் அமைதி தீர்வு காண இஸ்லாமிய  நாடுகள் ஒத்துழைப்பு கூட்டமைப்பு வலியுறுத்தியிருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.


காஷ்மீர் விவகாரத்தில் விரைவில் அமைதி தீர்வு காண இஸ்லாமிய  நாடுகள் ஒத்துழைப்பு கூட்டமைப்பு வலியுறுத்தியிருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், 14-வது இஸ்லாமிய நாடுகள் மாநாடு சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் புதன்கிழமை நடைபெற்றது. மாநாட்டின் இடையே ஜம்மு-காஷ்மீரில் இருந்து மாநாட்டுக்கு சென்ற குழுவுடன் இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் பொதுச் செயலர் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஜம்மு-காஷ்மீர் நிலவரம் குறித்து  தனது ஆழ்ந்த வருத்தத்தை அவர் தெரிவித்தார். மேலும், காஷ்மீர் மக்களின் விருப்பங்கள், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களின்படி, ஜம்மு-காஷ்மீர் பிரச்னைக்கு இந்திய அரசு அமைதி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார் என்று கூறப்பட்டுள்ளது.
சர்வதேச அமைப்பான இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இரான், ஈராக், சவூதி அரேபியா உள்பட 57 உறுப்பு நாடுகள் உள்ளன. அதில் 53 நாடுகளில், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு-காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அங்கு நிலவும் பிரச்னை, உள்நாட்டு பிரச்னை என்றும் இந்தியா கூறி வருகிறது. ஆனால் காஷ்மீர் நிலப்பரப்புக்கு பாகிஸ்தானும் உரிமை கோருகிறது. காஷ்மீரில் பயங்கரவாதத்தை பரப்புவதாக பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. 
எல்லையில் அத்து மீறல், ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் உள்ளிட்டவற்றால் இந்தியா-பாகிஸ்தான் இடையே  அடிக்கடி போர் பதற்ற சூழல் உருவாகிறது. 
இந்நிலையில்,  இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக விரைவில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண  வேண்டும் என்று இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு கூட்டமைப்பு  இந்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
ஆனால்,  பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்தும்வரை பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த இயலாது என்று இந்தியா தனது நிலையில் உறுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com