நீரவ் மோடியின் காவல் ஜூன் 27 வரை நீட்டிப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கோடிக்கணக்கான ரூபாய் நிதி மோசடி செய்த விவகாரத்தில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது தொடர்பான வழக்கை எதிர்கொண்டு வரும் தொழிலதிபர் நீரவ் மோடியின் காவலை
நீரவ் மோடியின் காவல் ஜூன் 27 வரை நீட்டிப்பு


பஞ்சாப் நேஷனல் வங்கியில் கோடிக்கணக்கான ரூபாய் நிதி மோசடி செய்த விவகாரத்தில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது தொடர்பான வழக்கை எதிர்கொண்டு வரும் தொழிலதிபர் நீரவ் மோடியின் காவலை ஜூன் மாதம் 27ஆம் தேதி வரை பிரிட்டன் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
பிரிட்டன் தலைநகர் லண்டனின் தென் மேற்கு பகுதியில் உள்ள சிறையில் நீரவ் மோடி தற்போது அடைக்கப்பட்டுள்ளார். 
நீரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு விசாரணை, லண்டன் வெஸ்ட்மின்ஸ்ட்ர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி எம்மா அர்புத்நாட் முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எம்மா அர்புத் நாட் கூறுகையில், நீரவ் மோடியின் காவலை ஜூன் மாதம் 27ஆம் தேதி வரை நீட்டிக்கிறேன். 
இந்தியாவுக்கு நீரவ் மோடி நாடு கடத்தப்படும்பட்சத்தில், அவர் எந்த சிறையில் அடைக்கப்படுவார் என்பதை இந்திய அரசு 14 நாள்களில் உறுதி செய்ய வேண்டும். மும்பை ஆர்தர்ரோடு சிறையாக இருந்தால் நல்லது என்றார்.
நீரவ் மோடியின் வழக்குரைஞர் குறுக்கிட்டு, ஆர்தர்ரோடு சிறையாக இல்லாதபட்சத்தில், மனித உரிமை விதிகளுக்கு உட்பட்டு இந்தியாவில் வேறு சிறைகள் எதுவும் இருக்கிறதா? என்று பிரதிநிதி ஒருவரை நியமித்து உறுதி செய்ய நீதிபதி கேட்க வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து, இந்திய அரசின் சார்பில் இந்த வழக்கில் ஆஜராகி வரும் கிரவுன் புராசிகியூஷன் சர்வீஸ் அமைப்பின் வழக்குரைஞரை நோக்கி, நீரவ் மோடிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு அடிப்படை முகாந்திரம் இருப்பதற்கான எழுத்து வடிவ ஆவணங்களை 6 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி கேட்டுக் கொண்டார். 
இதன்பின்னர் வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை ஜூன் 27ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
விசாரணையின்போது அமலாக்கத் துறை, சிபிஐ அதிகாரிகள் அடங்கிய குழுவும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்து விட்டு, லண்டன் சென்று நீரவ் மோடி தலைமறைவானார். 
நீரவ் மோடிக்கு எதிராக இந்தியா அளித்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, அவரை கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com