மகாராஷ்டிரத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்பில் நிகழாண்டில் 10% இடஒதுக்கீடு கிடையாது

மகாராஷ்டிரத்தில் நிகழ் கல்வியாண்டில் மருத்துவ பட்டமேற்படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்பில் நிகழாண்டில் 10% இடஒதுக்கீடு கிடையாது


மகாராஷ்டிரத்தில் நிகழ் கல்வியாண்டில் மருத்துவ பட்டமேற்படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மருத்துவ பட்ட மேற்படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில அரசு சுற்றறிக்கைகளை வெளியிட்டது. இதை எதிர்த்து, ரஜத் ராஜேந்திர அகர்வால் என்ற மாணவர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமெனில் கூடுதல் இடங்களை உருவாக்கப்பட வேண்டும்; இல்லாவிடில் மற்ற பிரிவினரின் இடங்கள் பறிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி அனிருத்தா போஸ் ஆகியோரைக் கொண்ட விடுமுறைக் கால அமர்வு முன் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை, கடந்த நவம்பர் மாதத்திலேயே தொடங்கி விட்டது. ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் கடந்த ஜனவரியில்தான் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து, மருத்துவ பட்ட மேற்படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீட்டை கடந்த மார்ச் மாதம் மகாராஷ்டிர அரசு அமல்படுத்தியது.
மாணவர் சேர்க்கை நடந்துகொண்டிருக்கும்போது, 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது. அதாவது ஒரு விளையாட்டு தொடங்கிய பிறகு, அதில் உள்ள விதிகளில் திருத்தம் செய்ய முடியாது. மருத்துவ பட்ட  மேற்படிப்புக்கு கூடுதல் இடங்களை இந்திய மருத்துவ கவுன்சில் உருவாக்காமல், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
தேசியவாத காங்கிரஸ் தாக்கு: உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, மகாராஷ்டிரத்தில் ஆளும் பாஜக அரசை தேசியவாத காங்கிரஸ் கட்சி கடுமையாகச் சாடியுள்ளது. 
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றுவதே பாஜகவின் சிறப்புத் தன்மையாகும். இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடைகளில் இருந்து இதை நாம் அறியலாம். மருத்துவ பட்ட மேற்படிப்பில் முதலில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டது; தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com