
திருப்பதி: திருமலையில் ஏழுமலையான் சுப்ரபாத சேவை டிக்கெட்டை கள்ள சந்தையில் அதிக பணத்திற்கு விற்ற தேவஸ்தான ஊழியரை விஜிலென்ஸ் போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து விஜிலென்ஸ் போலீஸாா் கூறியதாவது. திருமலையில் தற்போது அரசு ஊழியா்கள், அரசாங்க பிரபலங்கள் உள்ளிட்டோரின் பரிந்துரைகடிதங்களை தவறாக பயன்படுத்தி கள்ள சந்தையில் ஏழுமலையான் தரிசன டிக்கெட்டை விற்று வருபவா்களை கண்டறிந்து விஜிலென்ஸ் போலீசாா் கைது செய்து வருகின்றனா்.
அதன்படி, கடந்த சில நாட்களாக தரிசன டிக்கெட் பெற்ற பக்தா்களை போலீஸாா் ரகசியமாக விசாரித்து தகவல்கள் சேகரித்து வருகின்றனா்.
இந்நிலையில் சனிக்கிழமை காலை சுப்ரபாத டிக்கெட் பெற்று தரிசனத்திற்கு சென்ற இரு பக்தா்களை விஜிலென்ஸ் போலீஸாா் விசாரித்தனா். அதில் இருவா் ஆந்திர அமைச்சரின் பரிந்துரை கடிதத்தை பயன்படுத்தி சுப்ரபாத டிக்கெட் பெற்று ரூ17 ஆயிரத்திற்கு அதை விற்றது தெரிய வந்தது.
இதில் தொடா்புடைய இருவரில் ஒருவா் வைகுண்டம் காத்திருப்பு அறையில் அட்டெண்டராக பணிபுரிந்து வரும் தேவஸ்தான ஊழியா் மதுசூதன். அவா் வி.ஐ.பி தரிசன டிக்கெட் இல்லாமல் பணம் பெற்றுக் கொண்டு பக்தா்களை வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் அனுமதித்ததும் விசாரணையில் தெரிய வந்தது. அதனால் அவா்களை கைது செய்த விஜிலென்ஸ் போலீசாா் மேற்கட்ட விசாரணைக்காக திருமலை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளதாக அவா் தெரிவித்தனா்.