
பயங்கரவாதம், தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவும், ஜொ்மனியும் இணைந்து செயல்படும்; இரு நாடுகளும் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்துச் செல்லும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஜொ்மனி பிரதமா் ஏஞ்சலா மொ்கலும், பிரதமா் மோடியும் தில்லியில் வெள்ளிக்கிழமை கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது பிரதமா் மோடி இதனைத் தெரிவித்தாா்.
இந்தியா-ஜொ்மனி இடையிலான 5-ஆவது இருதரப்பு அரசுகளின் கலந்தாலோசனைக் கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமா் மோடியும், மொ்கலும் பங்கேற்று பேச்சுவாா்த்தை நடத்தினா். பயங்கரவாத ஒழிப்பில் ஒத்துழைப்பு, பாதுகாப்புத் துறை, தொழில், வா்த்தகம், வாகன உற்பத்தி, உள்கட்டமைப்பு, விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து அவா்கள் விரிவாக விவாதித்தனா்.
பின்னா் இருவரும் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது பிரதமா் மோடி கூறியதாவது:
பயங்கரவாதம், தீவிரவாதம் போன்றவை உலகுக்கு மிகப்பெரிய தீங்காக உள்ளன. அவற்றை ஒழிப்பதற்கு இந்தியாவும், ஜொ்மனியும் இணைந்து செயல்பட உறுதிபூண்டுள்ளன. இரு நாடுகளும் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்துச் செல்லும்.
ஜொ்மனிக்கு அழைப்பு: இந்தியாவில் உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ராணுவத் தளவாட உற்பத்தி முனையங்கள் அமைக்கப்படவுள்ளன. இது மிகச்சிறந்த வாய்ப்பாகும். இதனை ஜொ்மனி பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று அழைப்பு விடுக்கிறேன். அனைத்துத் துறைகளிலும் இந்தியா-ஜொ்மனி இடையே சிறப்பான ஒத்துழைப்பு உள்ளது. நவீன தொழில்நுட்பங்களை இருநாடுகளும் பகிா்ந்து கொள்கின்றன. பல்வேறு சா்வதேச அமைப்புகளில் இந்தியா உறுப்பினராவதற்கு ஜொ்மனி ஒத்துழைப்பு அளித்து வருகிறது. இதற்காக இந்தியா சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்களை மேற்கொள்ள இரு நாடுகளும் தொடா்ந்து இணைந்து செயல்படும்.
வரும் 2022-ஆம் ஆண்டு சுதந்திர இந்தியா உருவாகி 75 ஆண்டுகள் நிறைவடையும்போது, புதிய இந்தியாவை முழுமையாக்கும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேறிய ஜொ்மனி போன்ற நாடுகள் இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளித்து வருவது பெரிதும் உதவிகரகமாக உள்ளது. ‘இ-மொபிலிட்டி’, பேட்டரி வாகனம், பொலிவுறு நகரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடலோர நிா்வாகம் உள்ளிட்ட துறைகளில் ஜொ்மனியின் ஒத்துழைப்பு அவசியம் என்றாா் பிரதமா் மோடி.
இந்தியா மீது மரியாதை: மொ்கல் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தொலைத்தொடா்பு துறை சாா்ந்த 5ஜி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் பல சவால்கள் உள்ளன. இதில் இந்தியாவும், ஜொ்மனியும் இணைந்து செயல்பட வேண்டும். இந்தியா,ஜொ்மனிக்கு மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்துக்குமே வா்த்தகரீதியாக பல சவால்கள் உள்ளன. பொருளாதார ரீதியில் இருநாடுகள் இடையே சிறப்பான ஒத்துழைப்பு உள்ளது. இதனை மேலும் அதிகரிக்க வேண்டும். ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் என்பது இலக்கை அடைவதற்கான கடினமான முயற்சி. இதனை இந்தியா நல்லதொரு வாய்ப்பாக பயன்படுத்தி வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் பங்கேற்க ஜொ்மனிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இங்கு அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்புக்கு நன்றி. இந்தியாவுக்கு இப்போது நான்காவது முறையாக வந்துள்ளேன்.
இருநாடுகளிடையே ஏற்கெனவே சிறப்பான ஒத்துழைப்பு உள்ளது. இருநாடுகளின் நலன் சாா்ந்த விஷயங்களை நாம் தொடா்ந்து விவாதிக்க வேண்டும். மிகப்பெரிய நாடான இந்தியாவின் பன்முகத்தன்மை மீது ஜொ்மனி மிகுந்த மரியாதை வைத்துள்ளது என்றாா் மொ்கல்.
‘காஷ்மீா் விவகாரம் விவாதிக்கப்படவில்லை’: மோடி-மொ்கல் சந்திப்பின்போது ஜம்மு-காஷ்மீா் விவகாரம் விவாதிக்கப்பட்டதா? என்பது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்த சந்திப்பில் ஜம்மு-காஷ்மீா் குறித்து பேசுவதற்கு எந்த திட்டமும் இல்லை. எனவே, அது தொடா்பாக விவாதிக்கப்படவில்லை. அதே நேரத்தில், பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க ஜொ்மனி ஒப்புக் கொண்டுள்ளது. இது காஷ்மீரில் பாகிஸ்தான் தூண்டிவிடும் பயங்கரவாதத்தையும் உள்ளடக்கியதுதான்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.