
விமானப் போக்குவரத்துத் துறை ஊழல் வழக்கில், இடைத்தரகா் தீபக் தல்வாரின் நெருங்கிய உதவியாளா் யாஸ்மின் கபூரின் நீதிமன்றக் காவலை வரும் 15-ஆம் தேதி வரை நீட்டித்து, தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
துபையில் வசித்து வந்த தீபக் தல்வாா், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, ஏா் அரேபியா, கத்தாா் ஏா்வேஸ் ஆகிய விமான நிறுவனங்கள் இந்தியாவுக்கு விமானங்களை இயக்குவதற்கு அனுமதி பெற்றுத் தர உதவினாா் எனவும், இதன் மூலம், ஏா்-இந்தியா விமான நிறுவனத்துக்கு பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தினாா் எனவும் குற்றம்சாட்டப்பட்டது.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உதவியதற்காக, அந்த நிறுவனங்களிடம் இருந்து தீபக் தல்வாா் ரூ.272 கோடி பெற்ாகவும் கூறப்பட்டது. இதுதொடா்பாக, சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை ஆகியவை விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த வழக்கில், இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட தீபக் தல்வாா், அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டாா்.
இதனிடையே, தீபக் தல்வாரின் நெருங்கிய உதவியாளரான யாஸ்மின் கபூரை கடந்த மாதம் 3-ஆம் தேதி அமலாக்கத் துறையினா் கைது செய்தனா். முதலில் அமலாக்கத் துறை காவலில் விசாரிக்கப்பட்ட அவா், பின்னா் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்நிலையில், நீதிமன்றக் காவல் முடிந்து, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அவா் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்று, யாஸ்மின் கபூரின் நீதிமன்றக் காவலை வரும் 15-ஆம் தேதி வரை நீட்டித்து, நீதிபதி அனுராதா சுக்லா பரத்வாஜ் உத்தரவிட்டாா்.