குடியரசுத் தலைவர் ஆட்சி என அச்சுறுத்த வேண்டாம்: பாஜகவுக்கு சிவசேனை பதிலடி

​மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்று அச்சுறுத்த வேண்டாம் என பாஜகவுக்கு சிவசேனை பதிலடி தந்துள்ளது.
சுதிர் முங்கண்டிவார் (கோப்புப்படம்)
சுதிர் முங்கண்டிவார் (கோப்புப்படம்)


மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்று அச்சுறுத்த வேண்டாம் என பாஜகவுக்கு சிவசேனை பதிலடி தந்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 8 நாள்களாகியும் அங்கு புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்கவில்லை. மேலும் அம்மாநில சட்டப்பேரவையின் ஆயுள்காலம் வரும் 8-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இருந்தபோதிலும், பாஜக மற்றும் சிவசேனை ஆகிய கட்சிகளுக்கிடையே "சுழற்சி முறையில் முதல்வர்" என்ற பிரச்னை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில், அங்கு புதிய அரசு ஆட்சியமைப்பது குறித்து பாஜக மூத்த தலைவர் சுதிர் முங்கண்டிவார், தொலைக்காட்சி ஒன்றுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளிக்கையில்,

"குறிப்பிட்ட காலத்துக்குள் புதிய அரசு அமைக்கப்பட வேண்டும். இல்லாவிடில், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது" என்றார். முங்கண்டிவாரின் இந்தக் கருத்து அச்சுறுத்தலைப்போல் பார்க்கப்பட்டது.

இந்நிலையில், சிவசேனை கட்சிப் பத்திரிகையான 'சாம்னா'வில் வெளியான தலையங்கத்தில் முங்கண்டிவாரின் கருத்துக்குப் பதிலடி தரும் வகையில் செய்தி வெளியாகியுள்ளது.

அதில், "மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என அச்சுறுத்த வேண்டாம். சட்டம், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நாடாளுமன்ற மரபுகள் பற்றி எங்களுக்குத் தெரியும். அரசியலமைப்பில் குடியரசுத் தலைவர்தான் உச்சபட்சம். அவர் யாருடைய பாக்கெட்டிலும் இல்லை.

அரசு அமைப்பதில் தோல்வியடைந்தவுடன் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என அச்சுறுத்துவது முகலாயர்களின் உத்தரவைப்போல் உள்ளது. சட்டமும், அரசியலமைப்பும் யாருக்கும் அடிமையில்லை. தற்போதைய அரசியல் சூழலுக்கு நாங்கள் பொறுப்பல்ல. அது மகாராஷ்டிர மக்களுக்கும் தெரியும்.

இது ஏதோ, குடியரசுத் தலைவர் முத்திரை பாஜக அலுவலகத்தில் இருப்பதுபோன்றும், அதை அந்த கட்சி தனது சௌகரியத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொள்ளும் என்பதுபோன்றும் உள்ளது. முங்கண்டிவாரின் கருத்து பாஜகவுடைய தவறான உள்நோக்கத்தின் வெளிப்பாடாக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com