மகாராஷ்டிரத்தில் நீடிக்கும் இழுபறி: ஒரே நாளில் நிகழும் 3 முக்கியச் சந்திப்புகள்!

மகாராஷ்டிரத்தில் அரசு அமைப்பதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் இன்று (திங்கள்கிழமை) மாலை ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியைச் சந்திக்கிறார்.
மகாராஷ்டிரத்தில் நீடிக்கும் இழுபறி: ஒரே நாளில் நிகழும் 3 முக்கியச் சந்திப்புகள்!


மகாராஷ்டிரத்தில் அரசு அமைப்பதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் இன்று (திங்கள்கிழமை) மாலை ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியைச் சந்திக்கிறார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனை 56 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றன. இந்தத் தேர்தலை பாஜக மற்றும் சிவசேனை ஆகிய கட்சிகள் கூட்டணியாக எதிர்கொண்டாலும், தேர்தல் முடிவுக்குப் பிறகு இருகட்சிகளுக்கிடையே பிரச்னை எழத் தொடங்கியது.

ஆட்சியில் சமபங்கு என்று தேர்தலுக்கு முன் ஒப்புக்கொண்டதன்படி, ஆட்சியில் சிவசேனை கட்சிக்கு 2 1/2 ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என சிவசேனை பாஜகவிடம் கோரிக்கை வைத்தது. ஆனால், ஆட்சியின் 5 ஆண்டு காலமும் பாஜகவைச் சேர்ந்தவரே முதல்வராக இருப்பார் என்று பாஜக தடாலடியாகக் கூறிவிட்டது. இதனால், அங்கு அரசமைப்பதில் 11வது நாளாக இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில் சிவசேனை கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களை உறுப்பினருமான சஞ்சய் ரௌத் இன்று மாலை மகாராஷ்டிர ஆளுநரைச் சந்திக்கிறார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், 

"ஆளுநருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானதே தவிர அரசியல் சார்ந்தது அல்ல. பல்வேறு விவகாரங்கள் குறித்து அவரிடம் பேச உள்ளேன். எங்களுடைய நிலைப்பாடு குறித்து அவரிடம் தெரிவிப்பேன்" என்றார்.

இதனிடையே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்திக்கிறார். அதேசமயம், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பாஜக தேசியத் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவைச் சந்திக்கிறார்.

மகாராஷ்டிராவில் அரசு அமைப்பதில் இழுபறியான சூழல் நிலவி வருவதால், இந்த 3 சந்திப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

முன்னதாக, சஞ்சய் ரௌத் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், சிவசேனைக்கு 170-க்களின் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், பாஜகவுடன் பேச்சுவார்த்தை என்றால் அது முதல்வர் பதவி குறித்து மட்டுமே இருக்கும் எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com